Last Updated : 03 Oct, 2022 06:16 AM

2  

Published : 03 Oct 2022 06:16 AM
Last Updated : 03 Oct 2022 06:16 AM

தேசிய கல்விக் கொள்கையின் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ - தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவால் சர்ச்சை

சென்னை: தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைப்படி, வயது வந்தோருக்கான ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ (New India Literacy Programme) மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்க முடிவாகிஉள்ளது.

தேசிய தகவல் மையம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், தேசிய திறந்தவெளி பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் கல்வி முறை உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களும் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்துக்கான செலவினம் ரூ.1,038 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் பள்ளிக்கல்வித் துறை மூலமாக ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்‌’ செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர் குப்புசாமி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற வார்டுகள், கிராமங்கள், ஊரகப் பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ அமல்படுத்தப்பட உள்ளது. முழுவதும் தன்னார்வலர்களைக் கொண்டு இது செயல்படுத்தப்படும்.

முதல்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும்‌ 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க‌த் தெரியாத ‌5 லட்சம்‌ பேருக்கு அடிப்படை எழுத்தறிவு‌ வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி எழுத, படிக்கத் தெரியாதவர்களை கண்டறிந்து தன்னார்வலர்கள் மூலம் கற்போர் மையம் தொடங்கி அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். கற்போருக்கு‌ பயிற்சி முடிவில் மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும், அக்கொள்கையின் பல்வேறு அம்சங்கள் தமிழக கல்வித் துறைகளில் வெவ்வேறு பெயரில் மறைமுகமாக அமல்படுத்தப்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை அதே பெயரில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டிருப்பது ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமீபத்தில் 4, 5-ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முறையும் இதன் நீட்சியே எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்க மத்தியஅரசுடன் சேர்ந்து கற்போம் எழுதுவோம் திட்டம் 2020-22-ம் கல்வியாண்டில் செயல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் 60-40 நிதி பங்கீட்டிலான இத்திட்டம் மூலம் 3.19 லட்சம் பேர் பயன் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது முறையாக அரசாணை வெளியிட்டு, புதிய பாரத எழுத்தறிவு திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளதா என்ற விவரம் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x