Published : 03 Oct 2022 07:41 AM
Last Updated : 03 Oct 2022 07:41 AM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 61.12 லட்சம் பேர் பயணித்த நிலையில், கடந்த 30-ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 46 ஆயிரத்து 404 பேர் பயணம் செய்தனர். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் மெட்ரோ ரயில் சேவை ஆலந்தூர்-சென்னை கோயம்பேடு இடையே கடந்த 2015-ல் தொடங்கியது. தற்போது, பரங்கிமலை - சென்ட்ரல், விமானநிலையம் - விம்கோ நகர் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடக்கத்தில், நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர்.
இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியபோது, 20 ஆயிரம் தினசரி பயணித்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. மெட்ரோ ரயில்களில் கடந்த சில மாதங்களாக தினமும் 1.50 லட்சம் முதல் 1.80 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.கடந்த செப்.12-ல் 2.30லட்சம் பேர் பயணம் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, ஒரே நாளில் பயணிப்போர் எண்ணிக்கை கடந்த 30-ம் தேதி 2.46லட்சத்தை கடந்தது.மெட்ரோ ரயில்களில் அன்றையநாளில் மட்டும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 404 பேர் பயணம் செய்தனர்.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக ஜனவரி 3-ம் தேதி ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, தற்போது 2.46 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 61லட்சத்து 12 ஆயிரத்து 906 பேர் பயணம் செய்துள்ளனர். இது, கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 4லட்சத்து 46 ஆயிரத்து 675 பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் தினசரி சராசரியாக 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நாள்தோறும் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில், மெட்ரோ ரயில்களில் பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடிகிறது. இதனால்,பயணம் நேரம் மிச்சமாகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில்களில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...