Published : 02 Oct 2022 06:13 PM
Last Updated : 02 Oct 2022 06:13 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அதிமுக பெண் ஒன்றிய கவுன்சிலருக்கும், அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் பொன்முடி.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது எனவும், 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஒவ்வொருராக கூறுங்கள், அப்போது தான் அதற்கு உரிய பதில் அளிக்க முடியும் என்றார்.
அப்போது அங்கு நின்றிருந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, இதே ஊராட்சியில் தான் வசிக்கிறேன். இந்த தலைவர் எனது வார்டுக்குட்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறினாலும் அவரும் கண்டுகொள்வதில்லை என்ற குற்ச்சாட்டை முன்வைத்தார். நான் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் நிதி ஒதுக்கீடு செய்யாமல் கட்சிப் பாகுபாடு பார்த்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்படுவதாக அமைச்சரிடம் முறையிட்டார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பொன்முடி, கிராம சபை கூட்டம், இதில் அரசியல் பேச வேண்டாம், எல்லாவற்றையும் பிடிஓவிடம் கூறு எனக் கூறினார். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து பேச முற்பட்டபோது, உட்காரும்மா, இங்கு பொதுமக்கள் குறைகளைப் பற்றிக் கேட்கத்தான் வந்திருக்கிறோம் என்றார். பின்னர் அவர் அமர்ந்தார்.
இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியதைத் தொடர்ந்து, பின்னர் போலீஸார் மற்றும் திமுக நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கிராம மக்களிடம் குறைகளை கூறுங்கள் என அமைச்சர் கேட்டபோது, கிராம மக்கள் அடுக்கடுக்காக 100 நாள் வேலை குடிநீர் பிரச்சினை என அதிகாரிகளிடம் முறையாக செயல்படவில்லை எனக் கூறி வந்தனர். பின்னர் உங்கள் பிரச்சினைகளை மனுவாக அதிகாரிகளிடம் அளியுங்கள், வீரபாண்டி அருகே உள்ள ஆதிச்சனூர் பகுதியில் நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்திற்கு செல்லவேண்டியிருப்பதால், நான் அங்கு செல்கிறேன், நன்றி வணக்கம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT