Published : 02 Oct 2022 10:46 AM
Last Updated : 02 Oct 2022 10:46 AM
ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 2.50 லட்சம்பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்ததாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுத பூஜையையொட்டி செப்.30, அக். 1 ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் அடுத்தடுத்து இயக்கப்பட்டன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய இடங்களில் இருந்தும் ஏற்கெனவே அறிவித்தவாறு குறிப்பிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இங்கு செல்ல கூடுதல் மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.
அதன்படி, சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரிஇயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 744 பேருந்துகள் நேற்று முன்தினம் இயக்கப்பட்டன. அவற்றில் 1 லட்சத்து 62,200 பயணிகள் பயணம் செய்தனர்.
தொடர்ந்து நேற்றைய தினமும் சேர்த்து சென்னையில் இருந்து 2 நாட்களில் சுமார் 3,500-க்கும்மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் வாயிலாக சுமார்2.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, “பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணிக்க போதிய பேருந்துகள் இயக்க போக்கு வரத்துத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட்ட பேருந்துகளில் 2.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதே போல் பிற நகரங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணிக்கவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆயுத பூஜையையொட்டி அக். 4, 5 ஆகிய தினங்கள் விடுமுறை என்பதால் இன்று (அக்.2),நாளை (அக்.3) ஆகிய நாட்களில் ஊர்களுக்கு பயணிக்க விரும்புவோருக்கும் போதிய பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வர போதிய பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT