Published : 02 Oct 2022 04:35 AM
Last Updated : 02 Oct 2022 04:35 AM

அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்க மறுத்த மூதாட்டி மீது வழக்கு பதியவில்லை: கோவை போலீஸ்

கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் | கோப்புப் படம்

கோவை

அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்க மறுத்து, கட்டண பயணச்சீட்டு தருமாறு நடத்துநரிடம் மூதாட்டி கேட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக, யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் இருந்து கண்ணம்மா நாயக்கனூர் நோக்கி கடந்த 28-ம் தேதி அரசுப்பேருந்து சென்றது. இப்பேருந்தில் நடத்துநராக வால்பாறையைச் சேர்ந்த வினீத் (28) பணியில் இருந்தார்.

இப்பேருந்து மதுக்கரை மார்க்கெட் அருகே சென்றபோது, குரும்பபாளையத்தை சேர்ந்த துளசியம்மாள் (70) என்பவர் ஏறினார். அவர் மகளிருக்கான இலவச பயணச்சீட்டை வாங்க மறுத்து, கட்டண பயணச்சீட்டு வழங்க வேண்டுமென நடத்துநரிடம் கேட்டார்.

இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் இறுதியில் மூதாட்டி துளசியம்மாளுக்கு கட்டண பயணச்சீட்டை நடத்துநர் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையே, மூதாட்டியை வேண்டுமென்றே அரசு நகரப் பேருந்தில் பயணச்சீட்டு கேட்டு வாக்குவாதம் செய்யுமாறு அதிமுகவைச் சேர்ந்த சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மதுக்கரை நகர திமுக செயலாளர் ராமு, மதுக்கரை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில், மூதாட்டி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி தொடர்பான வீடியோ விவகாரத்தில் இதுவரை யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

வழக்கு பதியப்பட்டதாக சமூக வலைதளத்தில் தவறான தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x