Published : 02 Oct 2022 04:40 AM
Last Updated : 02 Oct 2022 04:40 AM
எதிர்ப்பு வலுப்பதால் மக்களவைத் தேர்தலில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா தொகுதி மாறுவார் என்று, மாநில பாஜக இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தெரிவித்தார்.
பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், உதகையில் நடைபெற்றது. இதில், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா பங்கேற்று, நிர்வாகிகளை சந்தித்து, செயல்பாடுகள் குறித்து ஆலோசித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கடந்த 28-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பாஜக இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
திமுக அரசு தொடர்ந்து பாஜக இளைஞரணி நிர்வாகிகளை, பொய் வழக்கில் கைதுசெய்து வருகிறது. சிறு, சிறு சம்பவங்களில்கூட பாஜகவினரை பிபிடி, பிசிஆர் பிரிவில்கைது செய்கின்றனர். 6 மாவட்டங்களில் 8 பாஜக நிர்வாகிகள்கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி எம்.பி. ஆ.ராசா இந்துக்களை தவறாக பேசியுள்ளார். அவர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது காவல் நிலையங்களில் பாஜக இளைஞரணியினர் புகார் அளித்தும், சிஎஸ்ஆர் கூட வாங்க முடியவில்லை.
அண்ணாமலையை பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பாஜகவுக்கு வருகின்றனர். திமுகவின் அராஜகத்துக்கு முடிவுகட்டப்படும். 2026-ல் அண்ணாமலை ஆட்சியை தடுக்க முடியாது. மக்கள் இலவசத்தை விரும்பவில்லை. இலவசத்தை வழங்கிவிட்டு ஓசி என மக்களை அவமதிக்கிறீர்கள்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜகவினர் கடுமையாக உழைக்கின்றனர்.
ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளதால், 2024-ம் ஆண்டு தேர்தலில் வேறு தொகுதிக்குதான் அவர் மாறுவார். அமேதியிலிருந்து மாறி வயநாட்டில் போட்டி யிட்டது போல, இந்த முறை கன்னியாகுமரியில் தான் ராகுல் காந்தி போட்டியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT