Published : 02 Oct 2022 04:31 AM
Last Updated : 02 Oct 2022 04:31 AM
சென்னை: சென்னையில் பாதுகாப்பு கணக்குகள் துறை தின விழா அத்துறை சார்பில், கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
பாதுகாப்பு கணக்குகள் துறை கடந்த 1951 அக். 1-ம் தேதி நிறுவப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் அக். 1-ம் தேதி இந்தியா முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் பாதுகாப்பு கணக்குகள் துறை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் துறை அலுவலகம் சார்பில், பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விநாடி-வினா போட்டி நடைபெற்றது.
மேலும், ரத்த தான முகாம், செஞ்சிலுவை சங்கம் மூலம் நடைபெற்றது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ரத்த தானம் செய்தனர்.
பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன், விழாவுக்கு தலைமை தாங்கினார். தக்ஷிண பாரத ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் பேசிய அருண், பாதுகாப்பு கணக்குகள் துறையின் முக்கியத்துவத்தையும், ராணுவத்துக்கு இத்துறையின் சிறப்பாற்றல் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய ஐந்து அலுவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிக்கு பதக்கம்
இப்பதக்கம் பெற்றவர்களுள் ஒருவரான செல்வி, தொலைபேசி ஆபரேட்டராக சென்னையில் உள்ள பாதுகாப்பு கணக்குகள் துறை அலுவலகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. இவருக்கு பதக்கம் வழங்கிய அருண், நான் எத்தனையோ பேருக்கு வழங்கிய 1,200 பதக்கங்களைவிட இவருக்கு வழங்கிய பதக்கத்தை பெருமையாக நினைக்கிறேன். நான் பெற்ற வெற்றிகளில் செல்வியை கவுரவிப்பதை மிகப்பெரிய வெற்றியாக நினைக்கிறேன் என பெருமிதத்துடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT