Published : 01 Oct 2022 08:34 PM
Last Updated : 01 Oct 2022 08:34 PM
சென்னை: தூய்மை இந்தியா தரவரிசை பட்டியலில் தமிழகத்தின் பெரிய நகரங்கள் ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளன. சிறிய நகரங்கள் அனைத்தும் 200-வது இடத்திற்கு மேல்தான் பிடித்துள்ளன.
தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016-ம் ஆண்டு முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆய்வு 75-வது சுந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு தூய்மை அமிர்தப் பெருவிழாவாக நடத்தப்பட்டது. இதில் 4,354 நகரங்கள் கலந்து கொண்டன. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களின் பட்டியல் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 13 மாநிலங்கள் உள்ள இந்தப் பட்டியலில் 1450 மதிப்பெண்களுடன் தமிழகம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதில், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களின் பட்டியில் இந்தூர் முதல் இடத்தையும், சூரத் 2வது இடத்தையும், நவி மும்பை 3வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவை 42-வது இடத்தையும், சென்னை 44-வது இடத்தையும், மதுரை, 45-வது இடத்தையும் பிடித்தது.
2021-ம் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னை 43-வது இடத்திலும், கோவை 46-வது இடத்திலும், மதுரை 47-வது இடத்திலும் இருந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு சென்னை ஒரு இடம் பின்தங்கியுள்ளது. கோவை மற்றும் மதுரை ஒரு சில இடங்கள் மட்டுமே முன்னேறி உள்ளது.
1 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள நகரங்களில் திருப்பதி, மைசூர், புதுதில்லி உள்ளிட்ட நகரங்கள் முதல் 3 இடத்தை பிடித்தன. தமிழகத்தில் சேலம் 221-வது இடத்தையும், தூத்துக்குடி 226-வது இடத்தையும், நாகை 261-வது இடத்தையும், திருச்சி 262-வது இடத்தையும், புதுக்கோட்டை 267-வது இடத்தையும், திருவண்ணாமலை 271-வது இடத்தையும், கும்பகோணம் 287-வது இடத்தையும், தாம்பரம் 288-வது இடத்தையும், வேலூர் 291-வது இடத்தையும், கடலூர் 291-வது இடத்தையும், ஆவடி 302-வது இடத்தையும், நெல்லை 308-வது இடத்தையும், திண்டுக்கல் 316-வது இடத்தையும், ஈரோடு 322-வது இடத்தையும், திருப்பூர் 377 வது இடத்தையும், ஆம்பூர் 338-வது இடத்தையும், ராஜபாளையம் 339-வது இடத்தையும், காஞ்சிபுரம் 356-வது இடத்தையும், காரைக்குடி 371-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகம் ஒரு விருதை மட்டுமே பெற்றுள்ளது. தென் மண்டலத்தில் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் புதிய மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவு கோவை மாவட்டத்தில் போத்தனூர் நகரம் மட்டுமே விருது பெற்றுள்ளது. மற்ற எந்த நகரங்களும் விருதை பெறவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT