Published : 01 Oct 2022 04:08 PM
Last Updated : 01 Oct 2022 04:08 PM

தமிழகத்தில் அக்.11-ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: 10 கட்சிகள், 13 அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு

சில நாட்களுக்கு முன்பு மனித சங்கிலிக்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் துறையிடம் மனு அளிக்க வந்த தலைவர்கள்

சென்னை: தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இம்மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று 10 கட்சிகள் மற்றும் 13 அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆகியவற்றுக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில், அக்.11-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கட்சிகள், 13-க்கு மேற்பட்ட அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், "மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர் 2 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல் துறையினர் விளக்கியதோடு, மனித சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவர்களோடு தொலைபேசியின் ஊடாகக் கலந்து பேசியதன் அடிப்படையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் எதிர்வரும் அக்டோபர் 11-ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவுமான இந்த மனித சங்கிலி நிகழ்வில் அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அப்போராட்டத்தை வெற்றிபெற வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுப்பு: உத்தரவை ரத்து செய்யக் கோரி கம்யூ., விசிக மனு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x