Published : 01 Oct 2022 02:06 PM
Last Updated : 01 Oct 2022 02:06 PM
சென்னை: கலை உள்ள வரை சிவாஜி கணேசன் புகழ் நிலைத்து நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், " 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மணிமண்டபத்துக்குள் இருந்து வெளியே வைக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
நடிப்புக் கலைக்கு என்றும் இலக்கணமாகத் திகழுபவர் நடிகர் திலகம்! பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் ’சிவாஜி’ என்ற பட்டம் பெற்று, அந்தப் பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர். பராசக்தி ஹீரோவாக புரட்சிக் கனல் கக்கி, வரலாற்று நாயகர்களின் திரை வடிவமாக நம் மனதில் பதிந்துள்ள நடிகர் திலகம், முத்தமிழறிஞர் கருணாநிதியின் உயிரனைய நண்பர்.
1952-இல் வெளியான அவரது முதல் திரைப்படமான பராசக்திக்கு இது 70ம் ஆண்டு. முத்தமிழறிஞர் கருணாநிதியின் கூர்மிகு தமிழும் நடிகர் திலகத்தின் நடிப்பும் தமிழ்த் திரையுலகின் திருப்புமுனைகள்! கலை உள்ள வரை செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்!" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
பராசக்தி ஹீரோ! தலைவர் கலைஞரின் உயிரனைய நண்பர்!
பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் 'சிவாஜி' என்ற பட்டம் பெற்று, வரலாற்றில் நிலைத்துள்ளவர்!
கலை உள்ள வரை நடிகர் திலகத்தின் புகழ் இம்மண்ணில் நிலைத்து நிற்கும்!https://t.co/vzjp5QLDHH pic.twitter.com/yfO8vlS4u7— M.K.Stalin (@mkstalin) October 1, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT