Last Updated : 01 Oct, 2022 11:49 AM

 

Published : 01 Oct 2022 11:49 AM
Last Updated : 01 Oct 2022 11:49 AM

அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக் குறைவு 

சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

கடலூர்: உயர் ரத்த அழுத்தம் காரணமாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அதிகாலையில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவர் மெய்யநாதன் (52). நேற்றிரவு (செப்.30) இவர் புதுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு சென்றார். ரயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வந்த போது அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீரென அதிக அளவில் வியர்த்து, உடல் சோர்வும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி உடனே இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் தந்துள்ளார். ரயில்வே போலீஸார் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (அக்.1) அதிகாலை 2 மணி அளவில் ரயிலை நிறுத்தி, அமைச்சரை கார் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அவருக்கு உடனடியாக ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் இசிஜி ,எக்கோ எடுக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் சண்முகம் தலைமைனான மருத்துவ குழுவினர் அமைச்சருக்கு சிகிச்சை அளித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, கடலூர் எஸ் பி. சக்தி கணேசன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமகதிரேசன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவரும், திமுக நிர்வாகியுமான பழனி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அமைச்சரிடம் நலம் விசாரித்தனர்.

அமைச்சர் அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது அறிந்த அவரது குடும்பத்தினர் சென்னையிலிருந்து கார் மூலம் மருத்துவமனைக்கு வந்தனர். சிகிச்சை பெற்று உடல் நிலை சரியான பிறகு இன்று (அக்.1) காலை சுமார் 7 மணி அளவில் தனி காரில் அமைச்சர் மெய்யநாதன் குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்றார். அவரது காருக்கு பின் ஆம்புலன்சில் மருத்துவக் குழுவினரும் உடன் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x