Published : 01 Oct 2022 07:06 AM
Last Updated : 01 Oct 2022 07:06 AM
சென்னை: வங்கிக் கடனுக்கான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழக பதிவுத் துறையில் அனைத்து பணிகளும் கணினிமயமாக்கப்பட்டு, ‘ஸ்டார்’ மென்பொருள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக பதிவுக்கான ஆவணங்களை தயாரித்தல், வில்லங்க சான்று பெறுதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறு. சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் வங்கிக் கடன் பெறுவதற்கான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (எம்ஓடி), கடனை திருப்பிசெலுத்தும்போது வங்கிகள் எழுதித்தரும் ரசீது, 5 ஆண்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்பு தொடர்பானவாடகை ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான பதிவு இதுவரை நேரடியாக ஆவணத்தை சமர்ப்பிக்கும் முறையில் நடந்து வந்தது. இவையும் தற்போது இணையதள வழி பதிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தபுதிய வசதியை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.16-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன்மூலமாக, அலுவலகத்துக்கு வெளியே நடைபெறும் பத்திர உருவாக்கம், விரல்ரேகை எடுத்தல், ஆதார் அங்கீகாரம் வழி சரிபார்ப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துதல் முடிந்ததும், பத்திரம் பதிவுக்கு இணையதள வழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து விவரங்களும் சட்டமுறைப்படி சரியாக இருக்கும் பட்சத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கு ஏற்க இயலாத ஆவணங்கள் இருந்தால் உரிய காரணத்தைதெரிவித்து பதிவு செய்ய மறுக்கவேண்டும் என பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவுக்கு பத்திரத்தை தாக்கல் செய்த அன்றே, பதிவு செய்து இணையவழியில் அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஆனால், இதில் சிக்கல்கள் இருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் ஆன்லைன் மூலம்பதிவுக்கு விண்ணப்பிப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சார் பதிவாளர்கள் கூறும்போது, ‘‘சர்வர் பிரச்சினை, உள்நுழைவில் பிரச்சினை என்று கூறி பதிவுக்கு ஆன்லைனில் அனுப்புவதை தவிர்த்து, நேரடியாகவே ஆவணத்தை கொண்டு வருகின்றனர்’’ என்றனர்.
ரூ.8,500 கோடி வருவாய்: பதிவுத் துறையில் இணையதளம் வழி பதிவு, பதிவு செய்தஅன்றே பத்திரம் வழங்கப்படுவது,டோக்கன் வழங்கி அதன் மூலம் பத்திரப் பதிவு, தத்கால் முறை போன்ற நடவடிக்கைகளால் பத்திரப் பதிவு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பதிவுத் துறையின் வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பதிவுத் துறை வரலாற்றில் இல்லாத வகையில், ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல்வருவாய் ஈட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் வாயிலாக ரூ.8,500 கோடி வருவாய்கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தைவிட இது 40% அதிகம் என்று அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT