Published : 01 Oct 2022 06:14 AM
Last Updated : 01 Oct 2022 06:14 AM
சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை காந்தி ஜெயந்தியான அக்.2அன்று நடத்தாமல் நவ.6-ல் நடத்தவேண்டும். அதற்கு அக்.31-ம் தேதிக்குள் போலீஸார் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்.2 காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.திருவள்ளூர் நகர் காவல் ஆய்வாளர் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்ததை அடுத்து, ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ‘‘போலீஸார் அனுமதி மறுத்தது அவமதிப்பு நடவடிக்கை’’ என்றார். மூத்த வழக்கறிஞர்களான ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜாஆகியோர், ‘‘காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் நடத்தப்படும் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் மட்டும் எவ்வாறு அனுமதி மறுக்க முடியும்.சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது போலீஸாரின் கடமை’’ என்றனர்.
காவல் துறை தரப்பில் மூத்தவழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர், ‘‘என்ஐஏசோதனை, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப்இந்தியா அமைப்புக்கு தடை, பாஜக, ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற சம்பவங்களால் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட 52 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே அக்.2-ல் எந்த அமைப்பும் ஊர்வலமோ, பேரணியோ நடத்த கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்று தேதிகளில் ஊர்வலம் நடத்துவதாக இருந்தால் பரிசீலிக்கப்படும்’’ என்றனர்.
இதையடுத்து நீதிபதி, ‘‘அக்.2-ம்தேதி காந்தி ஜெயந்தி நாளில் இந்தஊர்வலத்தை நடத்துவதற்கு பதிலாக, நவ.6-ம் தேதி நடத்த போலீஸார் வரும் அக்.31-ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT