Published : 21 Nov 2016 12:05 PM
Last Updated : 21 Nov 2016 12:05 PM
சேகரிப்பில் உள்ள பணத்தை எடுக்கலாமா?
வீடு கட்டுவதற்காக பல ஆண்டுகளாக சேகரித்து வைத்துள்ள ரூ.3.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளேன். தற்போது வீடு கட்ட அந்தப் பணம் தேவைப்படுகிறது. பணத்தை எடுக்கலாமா? இதற்கு ஏதேனும் வரி செலுத்த வேண்டுமா?
- துரைராஜ், துறையூர்
சேமிப்புக்கு வருமான வரி இல்லை. சேமிப்புக்கான ஆவணங்களை வைத்திருந் தால், தற்போது அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தாராளமாக தாங்கள் பணத்தை எடுத்து செலவு செய்யலாம்.
மொய்ப் பணத்தை வங்கியில் செலுத்தலாமா?
என் திருமணத்துக்கு ரூ.6 லட்சம் மொய்ப் பணம் வந்துள்ளது. இதை வங்கியில் செலுத்தலாமா? திருமணச் செலவுக்கு ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அந்தப் பணத்தையும் யாரும் வாங்க மறுக்கின்றனர். இதை எப்படி சரி செய்வது?
- சந்தோஷ், சென்னை
குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு மொய்ப் பணத்துக்கு வருமான வரி இருக்காது. எனவே, மொய்ப் பணத்தை தாராளமாக வங்கியில் டெபாசிட் செய்யுங்கள். அதன்பிறகு, அந்தக் கணக்கில் இருந்து, நீங்கள் கடன் கொடுக்க வேண்டிய நபர்களுக்கு காசோலை யாகவோ, வரைவோலையாகவோ பட்டுவாடா செய்யுங்கள். பிற்பாடு வருமான வரித் துறை யினர் கேட்டால் காட்ட வேண்டும் என்பதால் மொய் நோட்டை பத்திரமாக வையுங்கள்.
பணம் மாற்ற கமிஷன் கொடுக்கலாமா?
500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முன்பின் தெரியாத நபர்கள் கமிஷன் கேட் கிறார்களே; கொடுக்கலாமா? இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது?
- அருண்குமார், எட்டிமடை - கோயம்புத்தூர்
வரி ஏய்ப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும்தான் வருமானத் வரி துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் சொல்வதுபோல், செல்லாத நோட்டை மாற்றித் தர யாராவது கமிஷன் கேட்டால் அதற்கு காவல் துறையே நடவடிக்கை எடுக்கும்.
பதிவுக் கட்டணத்தை செலுத்துவது எப்படி?
நான் வாங்கிய நிலத்தை பதிவு செய்வதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.3 லட்சத்தை பணமாக கட்ட வேண்டியுள்ளது. தற்போது கையில் பணம் இல்லாததால் எப்படி கட்டுவது என்று தெரியாமல் தவிக்கிறேன். இல்லாத சூழ்நிலையில் என்ன செய்வது அதற்கான தீர்வு தெரியாமல் தவிக்கிறேன்.
- ராமமூர்த்தி, திருப்பத்தூர்
உங்கள் கையில் இருப்பவை செல்லாத நோட்டுகளாக இருந்தால் அவற்றை உங்களது கணக்கில் செலுத்தி, அதில் இருந்து வரைவோலை மூலமாக பதிவுக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
15 லட்சத்தை டெபாசிட் செய்யலாமா?
நான் எண்ணெய் மில் குத்தகைக்கு நடத்தி வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக வருமான வரி கட்டி வருகிறேன். தற்போது ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தால் ஏதேனும் பாதிப்பு வருமா?
- கௌரிசங்கர், காங்கேயம்/ துரைராஜ், மயிலாடுதுறை
அரசின் அறிவிப்புப்படி உங்களது கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் செலுத்தலாம். ஆனால், வருமான வரி சிக்கல் வராமல் இருக்க வேண்டுமானால் உங்கள் கையிருப்பு கணக்கு தொடர்பான ஆவணங் களைச் சரியாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் வருமான வரி கட்டுபவர் என்பதால் உங்களிடம் இந்த 15 லட்சம் கையிருப்பில் இருப்பதை கையிருப்பு கணக்கு தெளிவாக புரிய வைத்துவிடும்.
கட்டணமில்லா தொலைபேசியில் அறியலாமே?
500, 1000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு மக்களை வங்கிக்கு வர வைப்பதற்குப் பதிலாக, கட்டணமில்லா தொலைபேசி மூலம் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் உள்ளது என கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இப்படிச் செய்வதன் மூலம், பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை யாராலும் மாற்ற முடியாதல்லவா?
- பீர்முகமது, தென்காசி
இப்போது உள்ள நடைமுறையே பல்வேறு சிக்கல்களைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. தொலைபேசி வழியாக பெறப் படும் தகவல்களின் உண்மைத் தன்மையை நம்ப இயலாது என்பதால் தங்களது யோசனை நடைமுறைக்கு சாத்தியப்படாது.
செல்லாத நோட்டுகளை வாங்கலாமா?
நாங்கள் எம்.ஆர்.எஃப். ஷோரூம் நடத்தி வருகிறோம். வங்கி நடப்புக் கணக்கில் மாதந்தோறும் ரூ.14 லட்சம் இருப்பு வைக்கும் நாங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து செல்லாத நோட்டுகளை வாங்கலாமா? கூடாதா?.
- மாது, தருமபுரி
அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை நீங்கள் வாங்காமல் இருப்பதே நலம்.
வெளிநாட்டு சேமிப்பை வங்கியில் செலுத்தலாமா?
நான் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகி றேன். கடந்த 10 ஆண்டுகளாக சேமித்து வைத்துள்ள ரூ.20 லட்சம் என்னிடம் உள்ளது. வீட்டுக்கு முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளேன். இந்தப் பணத்தை வங்கியில் செலுத்தும்போது ஏதும் கேள்வி வருமா?
- சலீம், கோயம்புத்தூர்
தாங்கள் வெளிநாட்டில் பணம் ஈட்டியதற்கான ஆதாரம், அதை முறையாக வரி செலுத்தி இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்கான ஆவணங்கள், இங்கே சேமித்து வைத்ததற் கான ஆவணம் உள்ளிட்டவைகளைப் பத்திர மாக வைத்திருந்தால் எவ்வித பயமும் இல்லாமல் தாராளமாக இந்தத் தொகையை வங்கியில் செலுத்தலாம்.
வட்டி - கடன் பணத்தை வங்கியில் செலுத்தலாமா?
எனக்கு 72 வயதாகிறது. இதுவரை நான் சேகரித்து வைத்திருந்த ரூ.6 லட்சத்தை 1.5 சதவீதம் வட்டிக்கு கொடுத்து வந்தேன். தற்போது அவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளாக என்னிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்தப் பணத்தை வங்கியில் செலுத்தினால் பிரச்சினை வருமா?.
- ராஜமாணிக்கம், காரமடை
வட்டி வருமானத்துக்கு நீங்கள் வருமான வரி கட்டவேண்டும். நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு செல்லாத பணத்தை நீங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாததாகவே கருதப்படும். இந்தப் பணம் எவ்வளவு இருந்தாலும் வங்கியில் செலுத்தலாம். ஆனால், வருமான வரி வரம்புக்குள் வந்தால் வரி கட்ட வேண்டி இருக்கும்.
கணக்கில் உள்ள 3 லட்சத்துக்கு சிக்கல் வருமா?
மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கும் நான் வரி செலுத்து கிறேன். சமீபத்தில் என் சகோதரரின் நகையை அடகு வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். அந்த நகையை திருப்பு வதற்காக என் வங்கிக் கணக்கில் தற்போது ரூ.3 லட்சம் உள்ளது. இதனால் ஏதேனும் பிரச்சினை வருமா?
- வெங்கட்ராஜ்
நகையை அடகு வைத்ததற்கு ஆவணம் இருக்கிறது. தற்போது வங்கியில் உள்ள ரூ.3 லட்சம் வருமான வரி கட்டிய பிறகு உங்களது வருமானத்தில் சேமித்த பணமாக இருக்கும்பட்சத்தில் பயப்பட வேண்டி யதில்லை.
மாதத்தில் ஒருமுறைதான் மாற்றமுடியுமா?
வங்கியில் ஒரு நபர் மாதத்தில் ஒருமுறை மட்டும்தான் கணக்கில் போடாமல் செல்லாத பணத்தை நேரடியாக கொடுத்து மாற்றிக்கொள்ள முடியுமா?
- கஃபார் ஷேக், சிதம்பரம்
வங்கிக் கணக்கு இல்லாமல் பணம் மாற்றுபவர்கள் டிசம்பர் 30-ம் தேதி வரை ஒரே ஒருமுறை அதுவும் இப்போது உள்ள அறிவிப்பின்படி இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
நீங்கள் செய்யவேண்டியது...
044-42890012 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு).
எதிர்முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களைப் பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT