Published : 20 Nov 2016 01:20 PM
Last Updated : 20 Nov 2016 01:20 PM
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,450 ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. அணைகளின் நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த ஆண்டும், வறட்சியின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, சிறு தானியம் உள்ளிட்ட பயிர் வகைகளையும் தோட்டப் பயிர்களையும் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
கோடை மழையும் தென்மேற்கு பருவமழையும் பொய்த்துப்போன நிலையில், வடகிழக்குப் பருவ மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர். அவர்களது நம்பிக்கையும் இப்போது வீணாகி விட்டது. இதனால் விவசாய பூமி வறண்டு கிடக்கிறது. திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள 4 அணை களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக குறைந்துள்ளது. 7,321 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில், 2,684 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. சாத்தனூர் அணை கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. அதன் எதிரொலியாக, கடந்த 25-11-15-ம் தேதி அணை திறக்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு 100 அடியைத் தாண்டிய சாத்தனூர் அணைக்கு தற்போது முற்றிலும் நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
59.04 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 30.83 அடியாக உள்ளது. 700 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 165.10 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா அணையின் நீர்மட்டம் 5.08 அடியாக உள்ளது. 87.232 மில்லியன் கனஅடி கொள்ளளவில், 14.435 மில்லியன் கன அடிக்கு தண்ணீர் உள்ளது.
அணையின் மதகு பழுது
62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர் மட்டம் 37.95 அடியாக உள்ளது. 287 மில்லியன் கன அடி கொள்ளளவில், 92.523 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. செண்பகத் தோப்பு அணையின் மதகுகள் அமைக்கும் பணி பாதியிலேயே தடைபட்டதால், முழு கொள்ளளவை எட்ட முடியாத நிலையில் அணை உள்ளது. 62 அடி உயரம் இருந்தும் 40 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீரை சேமிக்கும் நிலை உள்ளது. அணையை சீரமைக்கவேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் பலனில்லை.
மோசமான நிலையில் ஏரிகள்
அணைகளின் நிலை இப்படி இருக்க, ஏரிகளின் நிலையோ மிக மோசமாக உள்ளது. பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏரிகளில், 450 ஏரிகளுக்கு மேல் வறண்டு கிடக்கின்றன. மீதமுள்ள ஏரிகளிலும் 50 சதவீதத்துக்கு குறை வாக தண்ணீர் உள்ளது. சராசரி யாகப் பார்த்தால், 18 சதவீதம் தண்ணீர் மட்டுமே உள்ளது. இதே போல் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் 1,257 ஏரிகள் உள் ளன. அவற்றில் 1,000 ஏரிகளுக்கு மேல் வறண்டு கிடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஏரிகளின் தண்ணீர் இருப்பு என்பது சராசரியாக 13 சதவீதம் என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளரச்சித் துறையினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, போளூர், கலசப்பாக்கம், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், ஆரணி ஆகிய 8 வட்டங்களில் உள்ள ஏரிகளில் 99 சதவீத ஏரிகள் வறண்டு கிடக் கின்றன. வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் உள்ள ஏரிகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது’ என்றனர்.
நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
விவசாயிகள் கூறும்போது, ‘‘நமது மாவட்டத்தில் உள்ள நீர்நிலை கள் வறண்டுவிட்டன. அணைகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதனால், விவசாயத்துக்கு எந்த பயனும் இல்லை. வடகிழக்குப் பருவமழையும் ஏமாற்றிவிட்டது. கடந்த ஆண்டு பருவ மழை சிறப்பாக இருந்தது. அந்த மழைநீரை முழுமையாக சேமிக்க முடியவில்லை.
அதற்கு முக்கிய காரணம் அணைகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாததுதான். நீர்வரத் துக் கால்வாய்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. ஏரி மற்றும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றாததால் நீர்நிலை கள் முழுமையாக நிரம்பவில்லை.
நீர்நிலைகளைப் பாதுகாக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT