Published : 30 Sep 2022 04:41 PM
Last Updated : 30 Sep 2022 04:41 PM
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களில் வசிக்கும் மலை கிராமமக்கள் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ள 111 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளும் ஓசூர் ஏஎஸ்பியிடம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை கிராமமக்கள் தாமாக முன் வந்து ஒப்படைக்க வலியுறுத்தி மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் பொருட்டு வனங்களை சார்ந்து உள்ள கிராமமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் யாரேனும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தால் அவைகளை செப்டம்பர் 9ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதிக்குள் வனத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு வனத்துறை அலுவலர்களிடமோ, ஊர் முக்கியஸ்தர்களிடமோ, தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்.
உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நபர்கள் மீது வனக்குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது. ஒப்படைக்காமல் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப சக்தி படைத்த நாய்கள் படை மூலம் மலை கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சோதனை செய்யப்படும்.
இச்சோதனை மூலமோ, அல்லது வேறு ஏதும் வகையிலோ, உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டம், ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து ஓசூர் வனக் கோட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 7 வனச்சரகங்களிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களிடையே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க வலியுறுத்தி தினமும் துண்டு பிரசுரங்கள் வழங்கி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் வசிக்கும் கிராமமக்கள் தாமாக முன்வந்து 46 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளையும், ஜவளகிரி வனச்சரகத்தில் 40 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளையும், அஞ்செட்டி வனச்சரகத்தில் 13 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளும், ஓசூர் வனச்சரகத்தில் - 4, உரிகம் வனச்சரகத்தில் -5, கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் - 3 என மொத்தம் 111 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை கிராமமக்கள் தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர்.
இந்த 111 நாட்டு துப்பாக்கிகளையும் ஓசூர் வனக்கோட்ட அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள் முன்பு காட்சிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தலைமை வகித்து 111நாட்டு துப்பாக்கிகளை பார்வையிட்டார். இந்த 111 நாட்டுத் துப்பாக்கிகளும் ஓசூர் ஏஎஸ்பியிடம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.
நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்க வலியுறுத்தி கிராமமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட வனச்சரகர்கள், வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மலை கிராம பிரமுகர்கள் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட உதவி வன பாதுகாவலர்கள் ராஜாமாரியப்பன், வெங்கடேஷ் பிரபு, ஓசூர் வனச்சரகர் ரவி, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன், உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம், ஜவளகிரி வனச்சரகர் சுகுமார், அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன், வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT