Published : 30 Sep 2022 04:06 PM
Last Updated : 30 Sep 2022 04:06 PM
புதுடெல்லி: தமிழக கோயில்களை நிர்வகிக்க அரசு ஊழியர்களை நியமனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக கோயில்களுக்கு ஊழியர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரமில்லை. தமிழகம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் கோயில்களில், 19 ஆயிரம் கோயில்களில் பரம்பரை அறங்காவலர்கள் இல்லை.எனவே அறங்காவலர் இல்லாத நிலையில், உரிய தகுதி உள்ளவர்களை கோயில் ஊழியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
ஆனால் இதற்கு மாறாக அரசு ஊழியர்களை கோயில் பணிகளுக்கு நியமனம் செய்துள்ளனர்.எனவே தகுதியில்லாமல் நியமனம் செய்யப்பட்டவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களுக்கு கோயில் வருமானத்தில் இருந்து வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப கோயிலுக்கு செலுத்த உத்தரவிட வேண்டும்" என கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,"கோயில் நிர்வாகத்தை கவனிக்க ஏதுவாக ஊழியர்களை நியமிக்க அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. கோயில் நலனை கருதி அயல்பணியில் அறநிலையத்துறை ஊழியர்களை தற்காலிகமாக நியமித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை.
அறங்காவலர்கள் நியமனத்தை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என நம்புவதாகவும் கூற வழக்கை முடித்து வைத்து" உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 6 வாரதில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
மேலும், அரசு பதில்மனு தாக்கல் செய்த, அடுத்த 3 வாரத்தில், மனுதாரர் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT