Published : 30 Sep 2022 01:50 PM
Last Updated : 30 Sep 2022 01:50 PM

“அக்.2 மனிதச் சங்கிலிக்கு அனுமதிப்பீர். ஏனெனில்...” - டிஜிபியிடம் விசிக, இடதுசாரி தலைவர்கள் நேரில் கடிதம்

டிஜிபியை சந்தித்து மனு அளித்த தலைவர்கள்

சென்னை: அக்.2-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும் டிஜிபியை சந்தித்து விசிக, இடதுசாரி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அக்டோபர் 2-ம் அன்று தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று (செப்.30) டிஜிபியை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

அந்தக் கடிதத்தில்,"தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளின் சார்பில் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடத்திட திட்டமிட்டு ஆங்காங்கே உள்ள காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து இடங்களிலும் இந்த மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட, மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திடவும் அனுதினமும் போராடி வரும் அமைப்புகளாகும். எனவே, மதவாத அடிப்படையில் இயங்கும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளையும், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, தாங்கள் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் மதச்சார்பற்ற, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகளின் சார்பில் அமைதியான முறையில் அக்டோபர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டிருக்கும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” இயக்கத்திற்கு அனுமதி அளித்திட வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x