Published : 30 Sep 2022 01:24 PM
Last Updated : 30 Sep 2022 01:24 PM
புதுடெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து, ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை தசரா விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
அப்போது ஓபிஎஸ் தரப்பில், அதற்குள் அதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தயாராகி வருகின்றனர். எனவே, வழக்கு விசாரணைக்கு வரும்வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். அல்லது, தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இபிஎஸ் தரப்பிடம் “தற்போது நீங்கள்தானே பொறுப்பில் இருக்கிறீர்கள், பிறகு தேர்தலை நடத்துவதற்கு என்ன அவசரம்?” என்று கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து இபிஎஸ் தரப்பில், “பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம்” என்று ஒப்புதல் அளித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இபிஎஸ் தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT