Published : 30 Sep 2022 11:25 AM
Last Updated : 30 Sep 2022 11:25 AM

100% தன்னார்வ ரத்த தானம்: அனைவரும் ரத்த தானம் செய்ய முதல்வர் வேண்டுகோள்

கோப்புப் படம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தன்னார்வ ரத்த தானத்தின் 100 சதவீதத்தை எட்ட அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தின் கருப்பொருள் “ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். ஓருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களைக் காப்போம்” என்பதாகும்.

தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. அறிவியலில் ஏராளமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருந்தாலும் ரத்தம் என்ற அரிய திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இரத்த தானத்தின் போது 350 மி.லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.

18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். தானமாக பெறப்படும் ஒரு அலகு இரத்தம் 3 உயிர்களை காப்பாற்றும். உரிய கால இடைவெளியில் இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்த மையங்கள் மற்றும் தன்னார்வ ரத்த தான முகாம்களில் இரத்த தானம் செய்யலாம்.

ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இத்தளத்தில் ரத்த தான முகாம் மற்றும் ரத்த கொடையாளர்களை பதிவு செய்து கொள்ளலாம். இரத்த வகைகளின் இருப்பை தெரிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டுதோறும் ரத்த கொடையாளர்கள் மற்றும் இரத்த தான முகாம் அமைப்பாளர்களை தமிழ்நாடு அரசு பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கெளரவித்து வருகிறது. ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு எளிதில் இரத்தம் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு தொடர் தன்னார்வ ரத்த கொடையாளர்களின் விவரங்களை பதிவு செய்ய கணினிமயமாக்கப்பட்ட பதிவேடும் மற்றும் செயலியும் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த மையங்கள் மூலம் 90 விழுக்காடு இரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னார்வ இரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் தன்னார்வ இரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்த தானம் செய்திடவும் முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மகிழ்வுடன் இரத்த தானம் செய்திடுவோம். மனித உயிர்களை காத்திடுவோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x