Published : 30 Sep 2022 06:47 AM
Last Updated : 30 Sep 2022 06:47 AM
சென்னை: செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்குஅறிவுறுத்தினார்.
இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், மழைநீர் வடிகால் பணிகளை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன்படி, செம்மஞ்சேரி, நூக்கம்பாளையம், பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, அடையாறு ஆகிய இடங்களில் ரூ.174.48 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செம்மஞ்சேரி டிஎல்எப் அருகில் ரூ.21.70 கோடியில் மதுரபாக்கம் ஓடையில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைத்து, 500 மீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அரசன்கழனி கால்வாயிலிருந்து நூக்கம்பாளையம் பாலம் வரை ரூ.24.30கோடியில், 1,900 மீட்டர் தாங்குசுவர் அமைத்தல் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், நேதாஜி நகர் பிரதான சாலை, பொலினினி குடியிருப்பு அருகில் அரசங்கழனி வேலன் தாங்கல் ஏரியில் கதவணையுடன் கூடிய வெள்ள ஒழுங்கி அமைத்து, அரசன்கழனி ஏரியிலிருந்து கழுவெளி வரையிலான கால்வாயில் ரூ.29 கோடியில், 970 மீட்டர்நீளத்துக்கு அடித்தள கான்கிரீட் மற்றும்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கரணை தாமரைக்குளம் அருகில், பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து வெளியேறும் நீரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு கொண்டுசெல்ல ரூ.57.70 கோடியில் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரி தாம்பரம் சாலையில், தாமரைக்குளம் முதல் பள்ளிக்கரணை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிலையம் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வெள்ள நீர் சென்றடையும் வகையில் 1,000 மீட்டர் நீளத்துக்கு, ரூ.20 கோடியில் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி 4-வது பிரதான சாலையில், 6 தெருக்களில் 1,620 மீட்டர் நீளத்துக்கு, ரூ.5.18 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்பணிகள் நடைபெற்று வருகின்றன. அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில், 5 தெருக்களில் 1,085 மீட்டர் நீளத்துக்கு, ரூ.2.22 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன.
அடையாறு இந்திரா நகர் 3-வது பிரதான சாலையில், 21 தெருக்களில் 4,895 மீட்டர் நீளத்துக்கு, ரூ.14.38 கோடியில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு மொத்தம் ரூ.174.48 கோடி செலவில் நடைபெற்று வரும்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகளின் நிலை குறித்து நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா, மாநகராட்சி ஆணையர்ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முதல்வரிடம் விளக்கினர். பணிகள் அனைத்தையும் வரும் அக்டோபர் மாதத்துக்குள்முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT