Published : 30 Sep 2022 04:30 AM
Last Updated : 30 Sep 2022 04:30 AM
திமுக மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திமுகவின் 15-வது அமைப்புத் தேர்தலில் தேந்தெடுக்கப்பட்ட மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகளின் பட்டியலை நேற்று முன்தினம் திமுக தலைமை வெளியிட்டது.
இதில், நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில், குத்தாலம் ஒன்றியம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிப்பதாகவும் கட்சித் தொண்டர்கள் சிலர் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
2020-ல் மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாக அமைப்பில் நாகை வடக்கு மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. இதையும் கட்சியினர் உள்ளிட்ட சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: அமைப்பு ரீதியாக கட்சி ஏற்கெனவே குத்தாலம் கிழக்கு, குத்தாலம் மேற்கு என்று இரு பிரிவாக இருந்த நிலையில், தற்போது குத்தாலம் வடக்கு என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒருங்கிணைந்த குத்தாலம் ஒன்றியத்தைச் சேர்ந்த யாரும் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெறவில்லை. குத்தாலம் சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்த வரை 5 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.
பின்னர், மறு சீரமைப்பின்போது குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டு, அந்தத் தொகுதிக்குட்பட்ட பகுதிகள் பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பூம்புகார் தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்கு குத்தாலம் ஒன்றியத்தில் அதிக வாக்குகள் பெற்றதே முக்கிய காரணம் என்பது கட்சியினர் அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும், மாவட்டச் செயலாளர் தவிர்த்து, வேறு எந்தப் பொறுப்பும் வழங்க தகுதியான நபர் ஒருவரும் இல்லையா? அல்லது குத்தாலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் அதற்கு உடன்படவில்லையா? எனத் தெரியவில்லை. தற்போதைய சூழலில் அனைவரையும் அரவணைத்துச் சென்றால்தான் கட்சியை மேலும் வளர்க்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT