Published : 30 Sep 2022 04:10 AM
Last Updated : 30 Sep 2022 04:10 AM

ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாவட்டத் தலைவருக்கு நிபந்தனை ஜாமீன்

கோவை: திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட கோவை மாநகர், மாவட்ட பாஜக தலைவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, இந்து மதம் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் கடந்த 18-ம் தேதி கோவையில் 13 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பீளமேடு புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநகர், மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசா எம்.பி குறித்து மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

பொது இடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாலாஜி உத்தமராமசாமி மீது நடவடிக்கை எடுக்கும் படி, பீளமேடு காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் புகார் அளித்தார். அதன் பேரில், பீளமேடு காவல்துறையினர் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதியைக் குலைக்க குற்றம் செய்யத் தூண்டுதல், இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து பீளமேடு காவல்துறையினர், கடந்த 21-ம் தேதி அதிகாலை வீட்டிலிருந்த பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்தனர்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன்கோரி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாலாஜி உத்தமராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ராஜசேகர், பீளமேடு காவல்நிலையத்தில் 15 நாட்கள் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இந்த வழக்கு தொடர்பான பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஏதேனும் பேசுவதோ, கருத்து தெரிவிப்பதோ, அவதூறு தெரிவிப்பதோ கூடாது. எங்கும் தலைமறைவாகக்கூடாது. தேவைப்படும்போது போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் ஆகிய நிபந்தனைகளை விதித்து, ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x