Published : 29 Sep 2022 02:44 PM
Last Updated : 29 Sep 2022 02:44 PM
புதுச்சேரி: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் தியேட்டர் முன்பு தனுஷ் பேனருக்கு பீர், பால் அபிஷேகம் செய்தும், கையில் சூடம் ஏற்றியதை பார்த்தும் பொதுமக்கள் முகம் சுளித்தனர். நடிகர்கள் இவ்விஷயத்தில் மவுனம் கலைப்பார்களா என்ற கேள்விகளோடு கடந்து சென்றனர்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நகரின் முக்கிய சாலையில், கடலில் உடைந்த பாலத்திலுள்ள கம்பியில் பேனர் கட்டுவதுபோல் தற்போது கடலிலும் பேனர் வைக்க திரைப்பட நட்சத்திரங்களின் ரசிகர்கள் போட்டிப்போடத் தொடங்கினர். ஆழ்கடல் பயிற்சியாளர்கள் உதவியுடன் நடுகடலில் தனுஷ் பட பேனரை வைத்து வீடியோ, புகைப்படங்களையும் தனுஷ் ரசிகர்கள் வெளியிட்டனர். திரைப்படம் வெளியீட்டையொட்டி புதுச்சேரியில் திரையரங்குகளில் தனுஷின் பேனருக்கு சிலர் இன்று "பீர்" அபிஷேகம் செய்தனர்.
பல பாட்டில்கள் மதுவை தனுஷின் பேனரில் கொட்டினர். அதைத்தொடர்ந்து பாலாபிஷேகம் செய்தும், கையில் சூடம் ஏற்றி தேங்காய், பூசணி உடைத்தனர். தியேட்டர்களின் முன்பு மேளம் இசைக்க நடனமாடினர். முக்கியச் சாலைகளில் உள்ள திரையரங்கு முன்பு பால் அபிஷேகமும், பீர் பாட்டிலை உடைத்து அபிஷேகம் செய்தது பலரை முகம் சுளிக்க வைத்தது.
பொதுமக்கள் கூறுகையில், "நேற்று மாலை முதல் இன்று வரை இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதியில் உள்ளனர். முக்கியச் சாலையிலுள்ள திரையரங்கு வாயிலை கடக்கும் போது பீர், பால் அபிஷேகத்தை திரைப்படம் வெளியீட்டுக்காக நடத்தும் போக்கு மோசமானது. கடும் பாதிப்புடன் பணிக்கும், பள்ளிக்கும் செல்லும் வழியில் இதை பார்க்கும் போது கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. எத்திரைப்படமாக இருந்தாலும் இப்போக்கு கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட திரைநட்சத்திரங்கள் இதை கண்டித்து வாய் திறக்காமல் இருக்கக்கூடாது." என்றனர்.
போலீஸார் கூறுகையில், "கடலில் உயிருக்கு ஆபத்தான வகையில் பேனர்களை வைக்கும் போக்கு திரைப்படங்கள் வெளியாகும்போது நிகழ்கிறது. பேனர் வைத்தவுடன் எடுக்கிறோம். இதை செய்யாதீர்கள் என்று பலமுறை தெரிவித்துவிட்டோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT