Published : 29 Sep 2022 06:36 AM
Last Updated : 29 Sep 2022 06:36 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் சிலிண்டர் சேமிப்பு குடோனில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் உடல் நிலை மோசமாக உள்ளது. ஒரகடம் அடுத்துள்ள தேவரியம் பாக்கம் பகுதியில் உள்ள சிலிண்டர் சேமிப்பு குடோனில் இருந்து நேற்று இரவு சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதன் காரணமாக குடோன் அருகே இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவியது. இந்த சம்பவத்தின்போது குடோனுக்குள் இருந்த 10 ஊழியர்களும் அருகில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
போலீஸ் விசாரணை: தீ விபத்து ஏற்பட்டதும் மின் கசிவு மூலம் தீ பரவுவதை தடுக்க உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த விபத்தில் தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியன், ஜீவானந்தம், அவரது மகள்கள் நிவேதா, பூஜா, கோகுல், அருண் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இதுதொடர்பாக வாலா ஜாபாத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் காஸ் குடோனுக்கு வந்த பெரிய சிலிண்டரை இறக்கும் போது தவறி விழுந்து தீப்பிடித் திருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT