Published : 29 Sep 2022 01:16 PM
Last Updated : 29 Sep 2022 01:16 PM
சென்னை: "தடை செய்யப்பட்டதால் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் இறங்காமல், அதை காரணம்காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடை செய்வது, சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க முடியாத மாநில அரசின் இயலாமையினையே வெளிப்படுத்துகிறது" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயர் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, அவமதிக்கும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது யாரையோ திருப்திப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது.
மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன எனவும், மத்திய அரசு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்திருக்கும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன என்றும் அதே நாளில் வேறுசில அமைப்புகளும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும், அதனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
அண்மைக்காலத்தில் இந்து பெண்கள் குறித்து அவதூறு பேசி, மத உணர்வுகளை தூண்டியது திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அ.ராஜா தான் என்பதை உலகறியும். இந்து பெண்கள் குறித்து அவர் பேசிய தரக்குறைவான பேச்சுக்கு அவர்மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யாத திமுக அரசு, அதை காரணம்காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடை செய்வது கேலிக்கூத்து.
தடை செய்யப்பட்டதால் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால் அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் இறங்காமல், அதை காரணம்காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தடை செய்வது, சட்டம் ஒழுங்கை பேணி காக்க முடியாத மாநில அரசின் இயலாமையினையே வெளிப்படுத்துகிறது.
அதே நாளில் வேறு சில அமைப்புகள் மனித சங்கிலி தொடருக்கு அனுமதி கேட்டுள்ளது என்று அரசு குறிப்பிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த அமைப்புகளை திமுகவே தூண்டிவிட்டு கேட்க வைத்துள்ளது என்பது தெளிவாகிறது.
தேசபக்தி, தெய்வபக்தி, ஆன்மிகம்,கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம் ஆகியவைகளையே உயிர்மூச்சாக கொண்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியை கண்டு அஞ்சி, நடுங்கிக் கொண்டிருக்கின்றன திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள். அதிகாரத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் செயல்படுவார்களேயானால், அவர்கள் நீதியால் தோற்கடிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT