Published : 29 Sep 2022 12:47 PM
Last Updated : 29 Sep 2022 12:47 PM
சென்னை: கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் சேதமடைந்த தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணமடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில், பள்ளிக் கட்டிடம், வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மீண்டும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "பள்ளி விடுதிக்கு அங்கீகாரம் பெறாததால், பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரி செப்டம்பர் 14-ம் தேதி மனு அளித்தேன். ஆனால் அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள்," தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளன. அதற்காக அரசு ஏற்க வேண்டும் என கோர முடியுமா?
அரசே ஏற்க வேண்டும் என்றால் நிலம், கட்டிடங்களுக்கு விலை கொடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கிறது தெரியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT