Published : 29 Sep 2022 12:03 PM
Last Updated : 29 Sep 2022 12:03 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பெரிய கடை நேரு வீதி பகுதியில் மீன்கள் ஏலம் விடவும், சாலையோரம் மீன்களை விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி நகரப் பகுதியில் பெரிய கடை மார்க்கெட் பகுதியில் குபேர் மீன் அங்காடி செயல்பட்டு வந்தது. நாள்தோறும் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து வரும் மீன்களை, அங்காடி முன்பு சாலையில் கொட்டி காலை நேரத்தில் ஏலம் விடுவதும், விற்பனை செய்வதும் நடைபெற்று வந்தது.
இதனால் மீன் கழிவுகளை சாலையில் விட்டுச் செல்வதால் பிரதான வணிக வீதியான நேரு வீதியில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவந்ததால், இவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் செயல்படும் நவீன மீன் அங்காடி மையத்தில் விற்பனை செய்ய இடம் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் மீன் வியாபாரிகள் அங்கு செல்லாமல் எந்த பகுதியிலேயே ஏலம் விட்டு வருகின்றனர். இதனால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பெரிய கடை பகுதியில் மீன்கள் ஏலம் விடக்கூடாது, மொத்த வியாபாரம் செய்யக்கூடாது. சாலையோரம் மீன்களை விற்கக்கூடாது.
நகராட்சி பகுதிகளில் மீன்விற்க நிர்ணயிக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே விற்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டு இருந்தார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை மீன் விற்பனையில் ஈடுபடாமல் நூற்றுக்கணக்கான மீனவர்கள் பெரிய கடை பகுதியில் நேரு வீதி மற்றும் காந்தி வீதி சந்திப்பில் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரிய கடை போலீஸார் சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT