Published : 29 Sep 2022 06:44 AM
Last Updated : 29 Sep 2022 06:44 AM
சென்னை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் விரைவில் ஆட்சியை கலைக்கும் சூழல் ஏற்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘எங்கள் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத, கே.சி.பழனிசாமி என்பவர், சட்ட விரோதமாக, ஆன்லைன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நடத்தி, பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. தற்போது, எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன. எங்கள் ஆட்சியில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்பாக இருந்தனர். தற்போது, நிலைமை மோசமாகிவிட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக, விசிக தலைவர் திருமாவளவன், எந்த அடிப்படையில் கருத்து தெரிவித்தார் என்பது குறித்து அவரிடம் போலீஸார்விசாரிக்க வேண்டும். திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பொதுமக்களை இழிவுபடுத்தி வருகின்றனர். குழந்தைபோல இருக்கும் சென்னை மேயரை, அமைச்சர் நேரு செயல்பட விடாமல் படாதபாடு படுத்துவதாக தகவல்கள் வருகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்று நடந்தால் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி விடுவார்.
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. விரைவில், திமுகஆட்சியை கலைக்கும் சூழல் ஏற்படலாம். மக்களுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டுஒடுக்காமல், அதிமுக மீது இரும்புக்கரத்தையும், தீவிரவாத அமைப்புகள் மீது கரும்பு கரத்தையும் திமுக காட்டுகிறது. தனது தொகுதி என்பதால் கொளத்தூர் மட்டும் மழை வெள்ளத்தில் மூழ்கக் கூடாது என்பதற்காக முதல்வர் வேலை பார்த்து வருகிறார்.திமுகவே மூழ்கும் கட்சிதான். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT