Published : 29 Sep 2022 07:21 AM
Last Updated : 29 Sep 2022 07:21 AM

சென்னை, புறநகரில் மழைக்கால மின் விபத்துகளை தவிர்க்க ரூ.361 கோடியில் மின் விநியோக அமைப்புகள்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகருக்கு உட்பட்ட 28 சட்டப்பேரவை தொகுதிகளில் மின்வாரியம் சார்பில் ரூ.360.63 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகளை (ரிங் மெயின் யூனிட்) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மின்துறை சார்பில், சென்னை, செவாலியே சிவாஜிகணேசன் சாலையில்புதிதாக நிறுவப்பட்டுள்ள வளையசுற்றுத்தர அமைப்பை முதல்வர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம், சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட்ட 28 சட்டப்பேரவை தொகுதிகளில் ரூ.360.63 கோடி மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 2,488 வளைய சுற்றுத்தர அமைப்புகளையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, சேப்பாக்கம், எழும்பூர், துறைமுகம், கொளத்தூர், மாதவரம், மதுரவாயல், மயிலாப்பூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், திரு.வி.க.நகர், திருவொற்றியூர், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், விருகம்பாக்கம், ஆலந்தூர், பூவிருந்தவல்லி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய 28 சட்டப்பேரவை தொகுதிகளில் ரூ.787 கோடியில் விநியோக மின்மாற்றிகள் மற்றும் மின்வழிப் பாதைகளுக்கு புதியதாக 5,692 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகளை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், ஏற்கெனவே ரூ.31.31 கோடிமதிப்பிலான 216 வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதையடுத்து, 28 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ரூ.360.63 கோடியில் 2,488 வளையசுற்றுத்தர அமைப்பு கருவிகளை நிறுவும் பணிகள் முடிவுற்று, அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த கருவி அமைப்பதன் மூலம், மழைக்காலங்களில் ஏற்படும்மின் விபத்தைத் தவிர்க்க முடியும். மேலும், ஒவ்வொரு வளைய சுற்றுத்தர கருவியும் குறைந்தபட்சம் 2 மின்வழிப் பாதைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஏதேனும் ஒரு மின் பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு மின்வழிப் பாதையின் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மின் வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் அனைத்தும் ‘ஸ்கேடா’ (SCADA) சிஸ்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் தலைமையிடத்தில் இருந்தே இக்கருவிகளை இயக்க முடியும். இதனால் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கேபிள்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும் கூட அதை உடனே கண்டறிந்து துரிதமாகச் சரி செய்யவும் முடியும். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர் நா.எழிலன், துணை மேயர் மு.மகேஷ் குமார், நிலைக்குழுத் தலைவர் என்.சிற்றரசு, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் பகிர்மானம் மா.சிவலிங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x