Published : 09 Nov 2016 09:02 AM
Last Updated : 09 Nov 2016 09:02 AM
110 ஆண்டுகளில் எந்த தேதியைக் கேட்டாலும் கிழமையைச் சொல் லும் மாற்றுத்திறன் மாணவிக்கு, நல்ல உள்ளங்கள் பல நூறு கிலோ மீட்டர் கடந்து நேரில் வந்து உதவி செய்துள்ளன. மேலும், அந்த மாணவியின் படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.
திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தர் கண்ணன்-பானு தம்பதியின் மகள் பிரியங்கா(15). சிறுவதிலேயே மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர். மாற்றுத்திறன் சிறப்புக் குழந்தையான இவர், திருச்சி உறையூர் சிவானந்தா பாலாலயாவில் தேசிய திறந்த வெளி பள்ளி(என்ஐஓஎஸ்) மூலம் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர், 1941 முதல் 2050-ம் ஆண்டு வரை 110 ஆண்டுகளில் எந்த தேதியை சொன்னாலும், அதற்கு உரிய கிழமையைச் சொல் லும் திறன் படைத்தவர். அதே போல, ஒரு ஆண்டில் குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட கிழமை களில் வரும் தேதிகள் என்னென்ன என்று கேட்டாலும், தயங்காமல் பதிலளிக்கிறார்.
இவரது இந்த அசாத்திய திறமை குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் அக்டோபர் 31-ம் தேதி செய்தி வெளியானது. அதில், குடும்ப வறுமையால், அந்த மாணவிக்கு கல்விக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் பெற்றோர் அவதிப்படுவதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த மாண விக்கு உதவி செய்ய பல நல்ல உள்ளங்கள் முன்வந்தன. திருச் சியை அடுத்த அல்லித்துறையைச் சேர்ந்த சரவணன் என்பவர், பிரியங்கா படிக்கும் பள்ளிக்குச் சென்று ரூ.5 ஆயிரத்தை வழங்கி யுள்ளார். இதேபோல, நாகப்பட்டி னம் நடுவர் கீழ வீதியில் இயங்கி வரும், அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் ஜி.ராஜ் சரவணன், நிர்வாகிகள் வி.லட்சு மணன், எம்.மணிசுந்தரம் ஆகி யோர் பள்ளிக்கு வந்து, பிரியங் காவின் பள்ளிக் கட்டணமாக ரூ.21 ஆயிரத்துக்கான வரை வோலையை தாளாளர் கே.ஜி.மீனாட்சியிடம் வழங்கினர். மேலும், பிரியங்காவின் மேல்படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறி நெகிழ வைத்துள்ளனர்.
மேலும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் ஏ.வைகுந்தவாசன், ‘தி இந்து’ அலுவலகத்தை தொடர்புகொண்டு, மாணவிக்கான கல்விக் கட்டணத்தை முழுவதும் செலுத்த, டாக்டராக உள்ள தன் மகன் வி.அருண் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், ஏற்கெனவே கொடையாளர்கள் அளித்தத் தொகை போதுமானதாக இருப்பதாக அவரிடம் கூறியதைத் தொடர்ந்து, மாணவி பிரியங்காவுக்கு எந்த வகையிலும், எந்த சமயத்திலும் உதவி செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
தேடி வந்த ‘சீனியர் சிட்டிசன்’
மாணவி பிரியங்காவுக்கு உதவி செய்வதற்காக, கையில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு வந்த, சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர், பள்ளிக்குச் சென்று பிரியங்காவையும், அதே பள்ளியில் கேர் டேக்கராக வேலை பார்க் கும் அவரது தாய் பானுவையும் சந்தித்து ரூ.9 ஆயிரத்தை அளித்துள் ளார். இதனால் நெகிழ்ச்சியடைந்த பிரியங்காவின் தாய், அவரைப் பற்றிய விவரங்களை கேட்டபோது தனது பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் எதையும் சொல்ல மறுத்ததுடன், “உங்களது செல்போன் எண்ணைக் கொடுங்கள், நானே அவ்வப்போது தொடர்பு கொண்டு, வேண்டிய உதவிகளைச் செய்கிறேன்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT