Last Updated : 15 Nov, 2016 05:22 PM

 

Published : 15 Nov 2016 05:22 PM
Last Updated : 15 Nov 2016 05:22 PM

யூனிட் அளவீட்டில் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது: மணல் கொள்ளைக்கு உயர் நீதிமன்றம் கடிவாளம்

மத்திய அளவீட்டு சட்டத்துக்கு விரோதமாக யூனிட் அளவீட்டு முறையில் மணல் விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது. எடை அளவில் தான் மணல் விற்பனை நடைபெற வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகளை யூனிட் அளவில் அளவீடு செய்யாமல், டன் கணக்கில் அளவீடு செய்து விற்கக்கோரியும், யூனிட் அளவில் மணல் விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும் முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, மத்திய அளவீடு சட்டம் 2009 அடிப்படையில் திடப் பொருள்களை கிலோ கிராம் அளவில் தான் வழங்க வேண்டும். மத்திய சட்ட அளவீட்டுத்துறை சார்பிலும் மணலை கிலோ கிராம் அளவில் தான் விற்க வேண்டும் என 2011ல் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் யூனிட் அளவில் மணல் விற்பனை செய்வது சட்டவிரோதம். இந்த அளவீடு முறையில் முறைகேடு நடைபெறுகிறது. கர்நாடகாவில் டன் கணக்கில் தான் மணல் விற்கப்படுகிறது. தமிழகத்தில் தான் யூனிட் அளவில் மணல் அளவீடு செய்யப்படுகிறது என்றார்.

தமிழக சட்ட அளவீட்டுத்துறை இணை ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆஜராகி, மணல் குவாரிகளில் மணல் அளவீடு செய்யும் முறை குறித்து விளக்கினர். அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் யூனிட் அளவீட்டில் மணலில் விலையை நிர்ணயம் செய்து 2008ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை அடிப்படையில் தான் யூனிட் அளவில் மணல் விற்கப்படுகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மத்திய அளவீட்டு சட்டத்தில் மணல் கிலோ கிராம் கணக்கில் தான் விற்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது யூனிட் அளவில் மணல் விற்பனை செய்வது சட்டவிரோதம். யூனிட் அளவில் மணல் விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது என்றனர். பின்னர் தீர்ப்புக்காக விசாரணையை நவ.18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x