Published : 28 Sep 2022 07:08 PM
Last Updated : 28 Sep 2022 07:08 PM
சென்னை: “அக்டோபர் 2 அன்று நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும்” என்று அரசியல் கட்சிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அக்டோபர்- 02 ஆம் நாள்- காந்தி பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியம், நகரம் மற்றும் மாநகரத் தலைமையிடங்களில் சுமார் 500 இடங்களில் 'சமூக நல்லிணக்கப் பேரணி' நடத்துவதென ஏற்கெனவே செப்-24 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிவிப்பு செய்திருந்தோம். பின்னர், செப்டம்பர் -26 அன்று மாலை 5.00 மணியளவில் சிபிஐ (எம்), சிபிஐ ஆகிய இடதுசாரி தோழமை கட்சிகளுடன் கலந்துரையாடியதையொட்டி, இது தொடர்பாக இடதுசாரிகளும் விசிகவும் இணைந்து செயல்படுவதென தீர்மானித்தோம். அதன்படி, இம்மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கப் பேரணிக்கு மாற்றாக 'சமூக நல்லிணக்க மனித சங்கிலி' போராட்டம் நடத்துவதென கூட்டாக முடிவெடுத்தோம். அதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இம்முடிவை அறிவித்தோம்.
இந்த அறப்போராட்டத்தை ஒரு முன்மொழிவாக அறிவித்து, பிற சனநாயக சக்திகள் யாவரும் இதில் பங்கேற்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தோம். இந்நிலையில், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் மன்றம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சி சாரா அமைப்புகளும் மற்றும் எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், நாம் தமிழர் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, சிபிஐ (எம்.எல்- விடுதலை), அ.தி்.ம.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் இந்த மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்கப் போவதாக முன்வந்து அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
அத்துடன், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் 'சமூகப் பிரிவினைவாதிகளுக்கு' எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் வகையிலான இந்த மனித சங்கிலி அறப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அனைத்துத் தோழமை கட்சிகளும் இன்னபிற மதச்சார்பற்ற சனநாயக சக்திகளும் ஒத்துழைப்பு நல்கி 'மக்கள் ஒற்றுமையை' நிலைநாட்ட முன்வரும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்.
தமிழகத்தின் அமைதியைக் கெடுத்து, வளர்ச்சியைத் தடுத்து சீர்குலைவு செய்யும் நோக்கோடு சனாதன சமூகப் பிரிவினைவாத சக்திகள் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வகையில் வன்முறைகளைத் தூண்டிக் கொண்டே உள்ளனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது, சேதப்படுத்துவது; பெட்ரோல் குண்டுகளை வீசுவது என தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து வருகின்றனர்.
அரசியல் ஆதாயம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட இந்தத் தற்குறிகளால் வெறுப்பும் வன்முறையும் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்தாவிட்டால் வட மாநிலங்களின் கதியே தமிழகத்தின் ஏற்படும். எனவே அக்டோபர்-02 காந்தியடிகள் பிறந்த நாளில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்தில் அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமென தோழமையோடு அழைக்கிறோம். சமூகப் பிரிவினைவாதிகளின் சதியை முறியடிப்போம். சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம்'' என்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT