Published : 28 Sep 2022 10:24 AM
Last Updated : 28 Sep 2022 10:24 AM

சென்னை - சீயோல் இடையே நேரடி விமான சேவை: தெ.கொரியா சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசிடம் தமிழர்கள் கோரிக்கை

சீயோலில் அமைச்சர் தங்கம் தென்னரசு

சீயோல்: தமிழக அரசின் சார்பில் தென்கொரியாவில் மேற்கொள்ளப்படும் தொழிற்சந்திப்புகளுக்காக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சீயோலுக்கு சென்றார். அவர் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்க பிரதிநிதிகள், தமிழ் மக்களை சந்தித்தார். சென்னை - சீயோல் இடையே நேரடி விமான சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித் தர வேண்டும், தென் கொரியாவில் ஆசிய பள்ளி நிறுவ அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது அமைச்சர், தமிழ்-கொரிய பண்பாட்டு மற்றும் வரலாற்றுத் தொடர்புகளை ஆய்வு நோக்கில் அணுகி ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளிக்கொணர்வதின் அவசியத்தை வலியுறுத்தினார். ஆய்வுப்பணிகளில் ஈடுபடுவோர் உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசின் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது சிறப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

அமைச்சரிடம், சென்னை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் உதவியுடன் கொரிய தமிழ் சங்கம் மேற்கொண்டுவரும் திருக்குறள் மற்றும் மணிமேகலை கொரிய மொழிப்பணிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்கு சார்ந்த பன்னாட்டு தொழில் ஊக்குவிப்பு முன்னெடுப்புகளால் சென்னையில் ஹுண்டாய் கார் தொழிற்சாலை தொடங்கப்பட்ட பின்னரே கொரியாவில் இன்று சில ஆயிரங்கள் என்றளவில் தமிழர்கள் வசிக்கும் சூழல் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தனர்.

கரோனா காலத்தில் நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்த முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் தென் கொரிய தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். அதேபோல் ஆக்சிஜன் உற்பத்தி, கொள்ளளவு, பகிர்ந்தளித்தல் குறித்து கவனம் செலுத்தி மக்களை காக்க உதவியதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசை பாராட்டினார்கள்.

அமைச்சரிடம் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்: பின்னர் கொரிய தமிழ்ச் சங்கத்தினர் சார்பில் அமைச்சரிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில், கொரியாவில் ஆசிய பள்ளி ஒன்றை அமைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி நிறைவேற்றித்தர வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறை மூலம் நடத்தப்படும் இணையவழிக் கல்விக் கழகம் ஊடாக இன்னும் பள்ளி ஏற்படுத்தப்படாத அயல்நாடுகளில் தன்னார்வ ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இணையவழிப் பள்ளி ஏற்படுத்தித்தர வேண்டும். மிகச்சிறந்த 50 தமிழ் புத்தகங்களை கொரிய மொழியாக்கம் செய்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையத்தால் கோரப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் வெளிநாட்டில் பயின்ற அல்லது ஆராய்ச்சி பட்டறிவுள்ளோர் எதிர்கொள்ளும் அதீத படிவ தேவைகளை குறைக்க ஆவண செய்யுமாறு தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல். சென்னை-சீயோல் இடையே நேரடி விமான சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித் தர வேண்டும். சிறப்பு துறைகளில் வெளிநாடுகளில் முனைவர் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டறிவு பெற்றோருக்கான கற்பித்தல் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x