Published : 28 Sep 2022 07:20 AM
Last Updated : 28 Sep 2022 07:20 AM
சென்னை: ‘பண்ருட்டி’ என்றால் பலாப்பழம் என்பது பிரபலம். ஆனால், அரசியல் வட்டாரத்தில் ‘பண்ருட்டி’ என்றாலே அறியப்படுபவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன். கடலூர் மாவட்டம் புலியூரில் 1937-ம் ஆண்டு நவம்பர் 10-ல் பிறந்தார் ராமச்சந்திரன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முடித்த அவர், மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றினார். பேரறிஞர் அண்ணா மீதான ஈர்ப்பில் திமுகவில் இணைந்த பண்ருட்டியார், 1967-ல் தனது 30-வது வயதில், பண்ருட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். அதன்பின், திட்டமதிப்பீட்டுக் குழு தலைவராக அண்ணாவால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, அண்ணா மறைவுக்குப்பின் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியிலேயே போட்டியிட்டு வென்ற அவர், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சரானார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், 1972-ல் அதிமுகவை தொடங்கிய நிலையில், 1977-ம் ஆண்டு நாவலர் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தபோது பண்ருட்டியாரும் அதிமுகவுக்கு வந்துஎம்ஜிஆருடன் ஐக்கியமானார். அதன்பின், எம்ஜிஆரின் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் பண்ருட்டி ராமச்சந்திரனின் பங்கு இருந்தது. 1979-ல் ஒடிசாவின் பிஜு பட்நாயக், திமுக - அதிமுகவை இணைக்க விரும்பி கருணாநிதி - எம்ஜிஆர் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடு செய்தாராம். பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், மறுநாள் இணைப்புக்கு வாய்ப்பில்லை என்று வேலூரில் அறிவித்தார் எம்ஜிஆர். இதற்கு காரணம் பண்ருட்டி ராமச்சந்திரன்தான் என திமுக தலைவர் கருணாநிதியே விமர்சித்திருந்தார்.
அதிமுகவில் 1977 முதல் 1987 வரையிலான காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பை வகித்தார். எம்ஜிஆர் இறக்கும்வரை அமைச்சராக இருந்தார். எம்ஜிஆர் வெளிநாடுகள் சென்றாலும், டெல்லி சென்றாலும் உடன்சென்று, அவரது பணிகளைக் கவனிக்கும் அளவுக்கு நெருக்கமாகஇருந்தார். இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் இவரை‘சோட்டா’ ராமச்சந்திரன் என்று அழைத்ததாகவும் தகவல் உண்டு.
ஈழத்தமிழர் பிரச்சினை சர்வதேச அரங்கில் பேசப்பட முக்கிய காரணமாக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். எம்ஜிஆரால் 1983-ல் ஐ.நா.சபைக்கு அனுப்பப்பட்ட அவர், 70நாட்கள் தங்கியிருந்து ஈழத்தமிழர் பிரச்சினை மற்றும் மலையகத் தமிழர் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார். இதனாலேயே இலங்கைஅரசை ஐ.நா. சபை கண்டித்தது. ஐ.நா. சபையில் பேசிவிட்டு சென்னைதிரும்பிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின், 1988-ல் அதிமுகவில் ஜெயலலிதாவுக்கென தனி அணி கட்டமைப்பை உருவாக்கியதில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பங்குண்டு. ஜெயலலிதா, கட்சியின் பொதுச்செயலாளரான காலகட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து வெளியேறிய நால்வர் அணியில் பண்ருட்டியாரும் ஒருவர். அதிமுகவில் இருந்து விலகியபின், பாமகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராமச்சந்திரன். 1991-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டு பாமகவின் முதல் எம்எல்ஏவானார் பண்ருட்டியார். அதன்பின்பாமகவில் இருந்தும் விலகிய அவர், ‘மக்கள் நல உரிமைக்கழகம்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், 2005-ம் ஆண்டு, தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கியபோது, அதில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக - அதிமுக கூட்டணிக்கு அச்சாரமாக இருந்தார். தேமுதிக சார்பில் 2011-ல் நடைபெற்ற தேர்தலில் ஆலந்தூரில் போட்டியிட்டு 7-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார். அத்துடன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பொறுப்பையும் ஏற்றார். அதன்பின், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக முறித்துக் கொண்டது. அப்போது தேமுதிகவைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். அதை பண்ருட்டியார் எதிர்க்காத நிலையில், விஜயகாந்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2013-ம் ஆண்டு டிச.10-ம் தேதி, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த அவர், 2014-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி திடீரென அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை, தன் மனைவி சாந்தி, மகன் சம்பத்குமாருடன் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து 2015-ல் அதிமுகவின்அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானத்துக்கும் ஆதரவளித்தார். பின்னர், ஒருசில கட்சி நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்று வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அதன்பின் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுடனான சந்திப்புக்குப்பின், பழனிசாமியை விமர்சித்தார். தற்போது, ஓபிஎஸ் அவருக்கு அரசியல் ஆலோசகர் பதவியை அளித்துள்ள நிலையில், கட்சியை விட்டே நீக்குவதாக பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கிடையே பண்ருட்டியாரின் ஆதரவாளர்கள் ‘எம்ஜிஆரின் கடிதம்’ குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கடிதம் வெளியானால் அரசியல் களம் மேலும் பரபரப்பாகக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT