Published : 28 Sep 2022 06:34 AM
Last Updated : 28 Sep 2022 06:34 AM

தமிழக அரசு சார்பில் கோவையில் அமையும் தொழிற்பூங்காவில் ராணுவ விமானம், ஹெலிகாப்டர் தயாரிக்க திட்டம்

இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட உள்ள பிரம்மாண்ட தொழிற்பூங்காவில் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக 420 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடிந்துள்ளன. தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம் சூலூர் அருகே வாரப்பட்டி கிராமத்தில் 420 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான தொழிற்பூங்கா அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. நில ஆர்ஜித பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட மேம்பாட்டு பணிகளை தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தொடங்கியுள்ளது. இந்நடவடிக்கைக்கு தொழில்துறையினர் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் தொழில்துறையினர் மத்தியில் வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது. அதில், தனியார் நிறுவனத்திடம் இருந்து 375 ஏக்கர் நிலத்தை டிட்கோ ஆர்ஜிதம் செய்து புதிதாகஅமைக்கப்படும் தொழிற்பூங்காவில், ராணுவ ஹெலிகாப்டர், விமானங்கள் தயாரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது. இதனால் கோவை மேலும் வளர்ச்சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் மையத்தின்இயக்குநர் ராமமூர்த்தி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ளதொழில் நிறுவனங்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளுக்கு தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு இதுபோன்ற தொழிற்பூங்கா மிகவும் உதவும்.

தேசிய முக்கியத்துவம் பெறும்: ஏற்கெனவே மத்திய அரசு மற்றும் கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ராணுவ தளவாட பூங்கா கோவையில் செயல்பட்டு வருகிறது. அதிநவீன டிரோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சில நிறுவனங்கள் விநியோகம் செய்யத் தொடங்கிவிட்டன. தற்போது தமிழக அரசு சார்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் தொழிற்பூங்காவில் ராணுவ விமானம், ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி தொடங்கினால் எதிர்வரும் ஆண்டுகளில் பாதுகாப்புத்துறை உற்பத்தியில் கோவை மாவட்டம் தேசிய அளவில் சிறந்து விளங்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கோவை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திருமுருகன் கூறும்போது, ‘‘கோவை மாவட்டம் சூலூர் அருகே வாரப்பட்டி கிராமத்தில் 420 எக்கரில் தமிழக அரசு சார்பில் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளன. டிட்கோ சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள்: இதுதொடர்பாக சென்னை, தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் (டிட்கோ) அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள தொழிற்பூங்காவில் ராணுவ தளவாடங்கள் மட்டுமின்றி தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் அமைக்கப்பட உள்ளன’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x