Published : 28 Sep 2022 06:44 AM
Last Updated : 28 Sep 2022 06:44 AM
சென்னை: எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதன் எதிரொலியாக சென்னை முழுவதும் உள்ள பெரியார், அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் கடந்த 22-ம் தேதிதமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பு மற்றும்அதன் நிர்வாகிகள், அவர்கள் தொடர்புடைய 93 இடங்களில்அதிரடி சோதனை நடத்தி பலர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி என வெவ்வேறு பகுதிகளில் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து அடுத்தடுத்து பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதுமட்டும் அல்லாமல் விழுப்புரம் அருகே கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அண்ணாவின் முழுஉருவச் சிலை அண்மையில் அவமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையின் மூக்கு பகுதி சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை சம்பவ இடம்விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள சுமார் 60 பெரியார், அண்ணா சிலைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்கக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள பெரியார், அண்ணா சிலைகள் உட்பட அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆரின் சிலையை ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT