Published : 28 Sep 2022 06:40 AM
Last Updated : 28 Sep 2022 06:40 AM
சென்னை: சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு நிறுவனங்களை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என மத்தியசுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே வலியுறுத்தியுள்ளார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்குமாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் கண்காட்சி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மாநாட்டை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே நேற்று தொடங்கி வைத்தார்.மாநாட்டில் அவர் பேசியதாவது:
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மத்தியஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் மாசுவை கட்டுப்படுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இதைத் தவிர்க்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். பிளாஸ்டிக்கை தடை செய்வதன் மூலம் புதிய தொழில்கள் உருவாகின்றன. பிளாஸ்டிக்குக்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுயசார்பு இந்தியாவை அடைய உதவுகின்றன. இத்தகையநிறுவனங்களை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாநில அரசுகள் தொடர்ந்து நடத்த வேண்டும். மீண்டும் மஞ்சப்பை, துணிப் பை பயன்படுத்துவோம், பூமியை ரசிப்போம் என்று அவர் கூறினார்.
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசும்போது, ‘‘பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது எளிதானது என்றாலும், அது கடந்த 30 ஆண்டுகளில் மனித வாழ்கைக்கும், இதர உயிர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது. இயற்கையை பாதுகாக்க பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருட்களை கண்டுபிடித்து அதை பயன்படுத்த வேண்டும். மாநிலம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முனைவோர்களை தமிழக அரசு எப்போதும் ஊக்குவித்து வருகிறது’’ என்றார். மாநாட்டில், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர் நரேஷ் பால் கங்வார், தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தலைவர் மு.ஜெயந்தி, உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT