Published : 28 Sep 2022 07:02 AM
Last Updated : 28 Sep 2022 07:02 AM
சென்னை: பதஞ்சலி நிறுவனர்களில் ஒருவரான ஆச்சாரிய பாலகிருஷ்ணா, இமயமலையில் பெயரிடப்படாத, ஏறப்படாத மலைச் சிகரங்களை அடைந்தது மட்டுமின்றி அவற்றுக்கு கலாச்சார ரீதியாக பெயர்களைச் சூட்டினார். மேலும் 500அரிய மூலிகைகளை அடையாளப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இமயமலையில் கோமுகி பகுதிக்கு மேலே உள்ள ரக்தவர்னா பனிமலை பிரதேசத்தில் உள்ள பெயரிடப்படாத, ஏறப்படாத 3 மலைச் சிகரங்களுக்கு பதஞ்சலி நிறுவனர்களில் ஒருவரான ஆச்சாரிய பாலகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், நேரு மலையேற்ற நிறுவனத்தின் உதவியுடன் சென்றனர். இந்த சாகசப் பயணம் கங்கோத்ரி பகுதியிலிருந்து கடந்த செப். 14-ம் தேதி தொடங்கியது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பதஞ்சலி நிறுவனர் சுவாமி ராம்தேவ் ஆகியோர் பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இக்குழுவினர் மிகவும் சவாலான பனி படர்ந்த மலைச்சிகரங்களை அடைந்தனர். இதுவரை பெயரிடப்படாத அவற்றுக்கு தேசிய பெருமையை பறைசாற்றும் வகையில் பெயரிடப்பட்டது. அதில்6 ஆயிரம் மீட்டருக்கு மேல் உயரமுள்ள சிகரத்துக்கு தேசியவாத பாரம்பரியத்தின் அடிப்படையில் ‘ராஷ்டிர ரிஷி’ என்றும், அதை ஒட்டியுள்ள 2-வது சிகரத்துக்கு யோகா பாரம்பரியத்தின் அடிப்படையில் ‘யோகரிஷி’ என்றும், இதன் இடது பக்கத்தில் 3-வதாக இருந்த சிகரத்துக்கு ஆயுர்வேத பாரம்பரியத்தின் அடிப்படையில் ‘ஆயுர்வேத ரிஷி’ என்றும் பெயரிடப்பட்டது.
மேலும் இந்த பயணத்தின்போது 550 அரிய மூலிகைகள் அடையாளம் காணப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த மூலிகைகள் சார்ந்த தீவிரமான ஆராய்ச்சிப் பணிகள் இனி மேற்கொள்ளப்படும். இந்த மலையேற்றக் குழுவில் நேரு மலையேற்ற நிறுவனத்தைச் சேர்ந்த கர்னல் அமித் பிஷ்ட், தீப் ஷாஹி, வினோத் குசைன், பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ்மிஸ்ரா, டாக்டர் பாஸ்கர் ஜோஷி,இந்திய மலையேற்ற நிறுவனத்தைச் சேர்ந்த விஹாரி ரானா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த மலைப் பகுதியில் கடந்த 1981-ம் ஆண்டு இந்தோ பிரெஞ்ச் கூட்டு பயணக்குழு மலையேற்றத்தில் ஈடுபட்டது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த மலை மீது ஆச்சாரிய பாலகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT