Published : 11 Nov 2016 03:00 PM
Last Updated : 11 Nov 2016 03:00 PM
உணவு என்ற ஒன்றைத்தான் மனிதர்களால் போதும் என்று சொல்ல முடிகிறது. பசியால் அவதிப்படும்போது 'உணவு வேண்டும்' என்று கேட்டுப் பெறவும் முடிகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது போல, உணவிடுபவர்களும் கடவுள்கள்தான்.
அந்த வகையில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், பணமில்லாது பசியால் வாடியவர்களுக்கு, தங்கள் உணவகத்தில் இருந்து இலவச உணவளித்து வருகின்றனர் திருநெல்வேலியைச் சேர்ந்த கோபி, விஷ்ணு ஆகியோர்.
இதுகுறித்து அவர்களிடம் பேசினேன்.
''திருநெல்வேலி, என்.ஜி.ஓ. காலனியில் எங்களுடைய ஸ்ரீ பாலாஜி உணவகம் உள்ளது. கடந்த மூன்று வருடமாக நடத்திவரும் இந்த உணவகத்துக்கு கல்லூரி மாணவர்கள், திருமணமாகாத இளைஞர்கள் அதிகம் வருகின்றனர். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசு அறிவித்த அன்று இரவே, அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். சில்லறை இல்லாமலும், ஏடிஎம்கள் இயங்காமலும் அவர்களால் சாப்பிடக் கூட முடியவில்லை.
குடும்பத்தில் இருந்தாலாவது நிலைமையை ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். பேச்சிலர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தோம். பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிஸினஸ் செய்யவேண்டாம் என்று முடிவெடுத்தோம். நிலைமையைக் கண்கூடாகப் பார்த்தவுடன், எதையும் யோசிக்கவில்லை. ''யார் வேணும்னாலும் எங்க ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுங்க. காசு இருந்தா கொடுங்க; இல்லன்னா பின்னாடி வாங்கிடுதோம்!'' என்று சொல்லிவிட்டோம்.
கையிருப்பு
எங்களிடம் 15 நாட்களுக்கான சமையல் பொருட்கள் ஏற்கெனவே கைவசம் இருந்தன. தொழிலாளர்களும் இருந்தார்கள். அனைத்தையும் வைத்து சமாளித்து வருகிறோம். இதுவொரு சின்ன செயல்தான். ஊடகங்கள் மூலமாக இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதைப் போலவே, மருந்தகங்கள், மருத்துவமனைகளிலும் நோயாளிகள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
பணத்தை மட்டுமே பிரதானமாகப் பார்க்காத சமூகம் உருவாக வேண்டும் என்பது எங்களின் ஆசை. வருங்காலங்களில் மனிதநேயம் குறித்த விழிப்புணர்வு பெருக வேண்டும். நிலைமை சீரான பிறகு, எங்கள் உணவகத்தில் சாப்பிட்டவர்கள் பணத்தைத் திருப்பித் தரலாம். தராமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் எண்ணி நாங்கள் கவலைப்படவில்லை. பசியென்று வந்தவர்களுக்கு வயிறார உணவிட்டோம் என்ற திருப்தியும் மனநிறைவும் போதும்" என்கின்றனர் கோபியும் விஷ்ணுவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT