Published : 28 Sep 2022 06:49 AM
Last Updated : 28 Sep 2022 06:49 AM
சென்னை: நாட்டின் ஜனநாயகத்தை, சமுதாயத்தை காப்பாற்ற சாதி, மதங்களைக் கடந்து நம் பணியை தொடர வேண்டும் என்று சிஎஸ்ஐ பவளவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ)பவள விழா நிகழ்ச்சி, சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: இந்தியா என்பது பல்வேறு மதத்தவர் வாழும் நாடு. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வாழ்கிறோம். அவரவர் மத நம்பிக்கை என்பது அவரவருக்கு சொந்தமானதே தவிர, அடுத்தவருக்கு எதிரானதாக இருக்காது.
எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம். எமது அரசு என்பது அனைவரையும் உள்ளடக்கிய அரசுதான். இந்த அரசுக்கு அன்பும் உரிமையும் இரண்டு கண்கள். ஒரு கை உழைக்கவும், இன்னொரு கை உணவூட்டவுமான அரசாக செயல்பட்டு வருகிறோம். எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும் மக்களுக்கு அன்பை, ஒற்றுமையைப் போதிக்கும் அமைப்பாகவே இருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை. நாட்டின் ஜனநாயகத்தை, சமுதாயத்தை காப்பாற்றுவதற்கு சாதி, மதங்களை கடந்து நாம் ஒன்றிணைந்து நம்முடைய பணியை தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். நிகழ்ச்சியில், கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தென்னிந்தியத் திருச்சபையின் பிரதமப் பேராயர் ஏ.தர்மராஜ் ரசாலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT