Published : 28 Sep 2022 04:10 AM
Last Updated : 28 Sep 2022 04:10 AM
அரசு மருத்துவமனையில் கால் துண்டிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலங்காநல்லூர் பூதக்குடியைச் சேர்ந்தவர் எஸ்.செல்வகுமார்(22). பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கரோனா பரவலால் விடுதிகள் மூடப்பட்டதால் செல்வகுமார் ஊருக்கு வந்திருந்தார். கடந்த 19.7.2020-ல் செல்வகுமார் பாட்டி வீட்டுக்குச் செல்வதற்காக தனது சகோதரருக்காக காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த சிலர் செல்வகுமாரிடம் மொபைல் போனை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் அவர்கள் செல்வகுமாரை அரிவாளால் கை, கால்களில் வெட்டி விட்டு தப்பினர். இது தொடர்பாக அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
செல்வகுமார் சிகிச்சைக்காக குலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.
மறுநாள் செல்வகுமாரின் வலது காலில் மாவுக் கட்டு போட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டனர். வீட்டுக்கு வந்ததும் காலில் கடும் வலி ஏற்பட்டதால், மறுநாள் மீண்டும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்தபோது அவரது வலது கால் முட்டுக்கு கீழ்ப் பகுதி அழுகியிருந்தது. இதையடுத்து வலது கால் முட்டுக்கு கீழ்ப்பகுதி அகற்றப்பட்டது.
இந்நிலையில் தனக்கு இழப்பீடு கேட்டு செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.வெங்கடேசன் வாதிட்டார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கால் துண்டிப்புக்கு மருத்துவரின் கவனக்குறைவு காரணம் அல்ல. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், மனுதாரர் இளம் வயதிலேயே காலை இழந்துள்ளார். அவர் சீருடைப் பணியில் சேர விரும்பி உள்ளார்.
காலை இழந்ததால் அவரது கனவு நிறைவேறாமல் போனது. இதனால் அவருக்கு பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதி அல்லது எஸ்சி, எஸ்டி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் நிவாரண நிதியில் இருந்து 12 வாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT