Published : 14 Nov 2016 02:26 PM
Last Updated : 14 Nov 2016 02:26 PM
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம் பெண் ஒருவர், தனது இரு குழந்தைகளுடன் உயர் நீதிமன்ற கிளை வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள நரசிங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலெட்சுமி (26). இவரும் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஞானவேல் என்பவரும் 5 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் விஜலெட்சுமி, குழந்தைகளை பிரித்து ஞானவேல் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக தெரிகிறது. இது தொடர்பாக விஜயலெட்சுமி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் விஜயலெட்சுமி, தனது குழந்தைகளுடன் நரசிங்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். விஜயலெட்சுமி தனது இரு குழந்தைகளுடன் நேற்று காலை உயர் நீதிமன்ற கிளையி்ன் பிரதான வாயிலுக்கு வந்தார்.
திடீரென தான் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை இரு குழந்தைகள் மீது ஊற்றினார். பின்னர் தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். தொடர்ந்து உடலில் தீயை பற்ற வைக்க முயன்றார். பிரதான வாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரும், உயர் நீதிமன்ற ஊழியர்களும் விரைந்து செயல்பட்டு மூவர் மீதும் தண்ணீரை ஊற்றி, தீக்குளிப்பை தடுத்து நிறுத்தினர். பின்னர் மூவரையும் ஒத்தக்கடை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் மீது புகார் அளித்த விஜயலெட்சுமி, நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரதான வாயிலில் குழந்தைகளுடன் இளம் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT