Published : 27 Sep 2022 06:59 PM
Last Updated : 27 Sep 2022 06:59 PM

ஐஓபி வங்கி 'வணிகத் தொடர்பாளர்கள்' தனியார்த் துறை ஊழியர்களாக மாற்றமா? - வேல்முருகன் கண்டனம்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி வேல்முருகன்

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகத் தொடர்பாளர்களை தனியார்த் துறை ஊழியர்களாக மாற்ற திட்டம் கொண்டுவந்துள்ள வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியிலும், மக்கள் சேவையிலும், வணிகத் தொடர்பாளர்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது. ஏழை, எளிய மக்களுக்கும், மிகவும் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதில், வணிகத் தொடர்பாளர்கள் திறம்பட செயலாற்றியுள்ளனர்.

முதியோர் உதவித்தொகை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஈழத் தமிழர்கள் அகதி முகாம், பிற அகதிகள் மறுவாழ்வு உதவித்தொகை, வராக்கடன், புதியகடன், புதிய நகை கடன், புதிய கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு, நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை, வணிகத் தொடர்பாளர்கள் தங்களின் அயராது உழைப்பினால் லாபகரமான வங்கியாக மாற்றியுள்ளனர்.

கரோனா காலத்தில் வணிகத் தொடர்பாளர்கள், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றியுள்ளனர். இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த 3400க்கும் மேற்பட்ட வணிகத் தொடர்பாளர்களை, தற்போது குறிப்பிட்ட தனியார் நிறுவனப் பணியாளர்களாக மாற்ற வங்கி நிர்வாகம் முடிவெடுத்திருப்பது, அவர்களின் வாழ்வில் விழுந்த மாபெரும் பேரிடியாகும்.

ஊழியர்களின் ஊதியத்தில் 20 விழுக்காட்டினை தரகுத் தொகையாகப் பிடித்தம் செய்து உழைப்பை உறிஞ்சும் தனியார் நிறுவனத்திடம் பணிபுரிய வலியுறுத்துவதும், வேலை செய்ய மறுக்கும் ஊழியர்களை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்வதும் சர்வாதிகாரத்தின் உச்சமாகும். வங்கி நிர்வாகத்தின் இச்செயல் பல ஆண்டுகளாகத் தொண்டாற்றி வரும் ஊழியர்களின் உழைப்பை அவமதிப்பதோடு, அவர்களைத் துச்சமெனத் தூக்கி எறியும் கொடுஞ்செயலாகும். மெல்ல மெல்ல பொதுத்துறை வங்கிகளை முழுவதுமாகத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தொடர் நடவடிக்கையின் தொடக்கமாகவே இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

எனவே, ஒன்றிய பாஜக அரசு, இந்தியன் ஓவர்சீஸ் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றி வரும் வணிகத் தொடர்பாளர்களைத் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக மாற்றும் வங்கி நிர்வாகத்தின் முடிவைக் கைவிட வேண்டும். வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அவர்கள் தொடர்ந்து பணியாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x