Published : 27 Sep 2022 06:45 PM
Last Updated : 27 Sep 2022 06:45 PM
கரூர்: “பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்ட பாஜக சார்பில், கரூர் மாவட்டத்தில் காசநோய் பாதித்த 100 பேரை தத்தெடுத்து அவர்களுக்கு ஓராண்டுக்கான ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கரூரில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று (செப். 27) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியது: ''இது கட்சி சார்பில் நடந்தாலும் கட்சி நிகழ்ச்சி கிடையாது. ஒரு சேவை. நாட்டில் 19 லட்சம் காசநோய் பாதித்தவர்கள் உள்ளனர். கடந்த 2017-ம் ஆணடு பிரதமர் மோடி 2025-ம் ஆண்டு காசநோய் இல்லாத நாடாக இந்தியா மாறும் எனக் கூறியுள்ளார். புரதம், நார்ச்சத்து உள்ள ஊட்டச்சத்துள்ள உணவுகள், மாத்திரைகளை நாள்தோறும் எடுத்துக் கொண்டாலே குணமாகிவிடலாம். நோய் பாதித்த ஒருவருக்கு மாதத்திற்கு ரூ.500 செலவாகும்.
முதல் கட்டமாக காசநோய் பாதித்த 100 பேருக்கு ஒராண்டுக்கு ஊட்டச்சத்து இந்நிகழ்ச்சியை அரசு மருத்துவமனையில் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் எங்கும் இல்லாத மோசமான அரசியல் கரூரில் உள்ளது. இது ஒரு சேவை. செப்.17 பிரதமர் மோடி பிறந்த நாளில் 1 லட்சம் யூனிட் ரத்தம் அளிக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் 6,180 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இதை தடை செய்ய முடியாது. பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது'' என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: ''இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார். உண்மையில் இதனை ஊக்குவிக்கவேண்டும். இதனை கண்டு பொதுமக்கள் மற்ற கட்சியினர் இதுபோல உதவ வாய்ப்புள்ளது.
பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது தொடர்பாக புரியாமல் சாதாரண வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர். இது ஆக்ட் ஆஃப் டெரர்ரிஸம் என்பதன் அடிப்படையில் தேசியப் பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும். எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாஜகவினரே இச்செயலில் ஈடுபடுவதாகக் கூறுவதை மூடர்கள் கூட்டம் அரசியலில் இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். இது ஒரு சாபக்கேடு.
பாஜகவை மதவாத கட்சி என்கின்றனர். மதம் பார்த்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்பவர்கள்தான் மதவாத கட்சி. பாஜகவை எதிர்ப்பதற்காக தவறு செய்பவர்களை ஆதரிப்பது கையலாகாதத்தனம். எம்எல்ஏ, எம்.பி. போன்ற பதவிக் கனவு இல்லை. 2026-ம் ஆண்டு வரை கட்சியை பலப்படுத்தும் பணிகள் மட்டுமே. இந்த ஆட்சி தமிழகத்தின் சாபக்டோக மாறி உள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT