Published : 27 Sep 2022 04:44 PM
Last Updated : 27 Sep 2022 04:44 PM
சென்னை: “திமுக அரசு, தொழிலாளர்களின் விடியலுக்கான அரசு” என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
தொழிலாளர் நலத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், "தமிழக முதல்வர் தலைமையிலான அரசு மக்களின் அரசு. தொழிலாளர்களுக்கான அரசு. இந்த அரசு தொழிலாளர்களின் விடியலுக்கான அரசு. இவ்வரசாங்க தொழிலாளர் துறையானது சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது.
இத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அனைத்து அலுவலர்களும் சிறந்த முறையில் இத்துறை செயல்பட நாம் அனைவரும் ஓர் உதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு காணும் நோக்கத்திலும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது.
தொழிற் தகராறுகள் சட்டம், 1947, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம், 1972, தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951, சட்டமுறை எடையளவு சட்டம், 2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி அதிகளவில் ஆய்வுகள் மேற்கொண்டு அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதன்மூலம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும்" என்று அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT