Published : 27 Sep 2022 05:54 PM
Last Updated : 27 Sep 2022 05:54 PM
மதுரை: மதுரை மாநகர் திமுக செயலாளர் யார் என்பதில் எம்எல்ஏ கோ.தளபதிக்கும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவு பெற்ற அதலை செந்திலுக்கும் கடும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இது, திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை புறநகர் வடக்கில் அமைச்சர் பி.மூர்த்தி, தெற்கில் எம்.மணிமாறன் ஆகியோர் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. ஆனால், மதுரை மாநகர் செயலாளர் தேர்வில் கடும் போட்டியுடன் நாளுக்கு நாள் பரபரப்பு திருப்பங்களும் நடந்து வருவது கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள் கூறியது: "ஏற்கெனவே மாநகர் வடக்கு, தெற்கு என 2 மாவட்டங்களாக இருந்தது ஒரே மாவட்டமாக இணைக்கப்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். எம்எல்ஏகோ.தளபதி, மாணவரணி நிர்வாகி அதலை செந்தில் ஆகியோர் போட்டியிட மனுக்களை அளித்துள்ளனர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்தான் செந்தில்.
கோ.தளபதிக்கே செயலாளர் பதவி என மூத்த நிர்வாகிகளிடம் முதல்வரே தெரிவித்துவிட்டதால், இதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேநேரம் செந்திலை ஆதரித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக களம் இறங்கிவிட்டார். எப்படியும் செந்திலை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக வாக்குரிமை உள்ள ஒவ்வொரு நிர்வாகியையும் நேரில் அழைத்து ஆதரவு கேட்கிறார். செந்திலை ஆதரிப்போரை உறுதிப்படுத்த ஆதரவு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதையறிந்த தளபதி உடனே தனது ஆதரவை உறுதிப்படுத்த அவரும் தனிக்கூட்டத்தை நடத்தியுள்ளார். இரண்டு இடங்களுக்கும் பலரும் சென்றதால் குழப்பம் ஏற்பட்டது.
செந்தில் தனது ஆதரவாளர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றார். வெற்றிக்கு தேவையான எண்ணிக்கை இல்லாததால், சென்னையிலிருந்த அமைச்சர் மதுரை திரும்பினார். தளபதியை தீவிரமாக ஆதரித்த மாநகர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபியிடம் அமைச்சர் பேசி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். எஸ்ஆர்.கோபி அமைச்சரை நேரில் சந்தித்து செந்திலுக்கு ஆதரவளிப்பளதாக உறுதியளித்தார். எஸ்ஆர்.கோபிக்கு கட்சியில் மேலும் உயர் பதவி பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் மேலும் சிலரை வளைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனால் போட்டி மிகக் கடுமையாகியுள்ளது. வெற்றி பெறப்போவது அமைச்சரா, தளபதியா என களநிலவரம் மாறிவிட்டது. பணம், பரிசு, கட்சி பதவி என பல்வேறு உத்தரவாதங்கள் அளிக்கப்படுவதால் மதுரை தேர்தல் மாநில அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் குடும்பத்திற்கு வேண்டியவர் என்பதால், இந்த செல்வாக்கை பயன்படுத்தி எப்படியும் செந்திலை செயலாளராக்கிவிடுவார் என ஒருதரப்பு நம்புகிறது. மேயர் இந்திராணியை இப்படித்தான் தேர்வு செய்தார். செந்திலை பதவிக்கு கொண்டுவருவதன் மூலம் மாநகராட்சியை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
அதேநேரம் தளபதிக்கே பதவி வழங்க முதல்வர் உறுதியளித்துவிட்டதால் போட்டி இருக்காது என்றும், இதை கே.என்.நேரு உள்ளிட்ட தலைமைக்கழக பொறுப்பாளர்கள் பலர் உறுதியளித்துள்ளதாக அமைச்சரின் எதிர்தரப்பு நம்புகிறது. மேலும், கட்சி விவகாரங்களில் அமைச்சரின் ஆலோசனை ஏற்கப்பட வாய்ப்பில்லை என தளபதி ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
மாநகர் மூத்த நிர்வாகிகள் பலரும் தளபதியை ஆதரிக்கின்றனர். மேலும், செந்தில் மீது உள்ள வழக்குகள், கட்சியில் மிகவும் இளையவர், மாநகருக்கு தொடர்பில்லாதவர் என பல்வேறு விசயங்கள் கட்சி தலைமையின் நேரடி கவனத்திற்கு தளபதியால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாநகர் தேர்தல் முடிவு அமைச்சர் பி.மூர்த்தியின் மாவட்ட அரசியலிலும் நேரடியாக எதிரொலிக்கும் என்பதால் அவரின் ஆதரவு செந்திலுக்கு இருக்காது" என்று அவர்கள் கூறினர். நாளுக்கு நாள் போட்டி கடுமையாகியுள்ளதால் மதுரை திமுகவினரிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT