Published : 27 Sep 2022 04:17 PM
Last Updated : 27 Sep 2022 04:17 PM
சென்னை: "அனைவருமே அமைதியுடன் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றபோது, அது பொதுமக்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே இத்தகைய கலாசாரம் இருக்கக் கூடாது. பெட்ரோல் குண்டு வீசுவது எல்லாம் தமிழ் கலாசாரம் கிடையாது" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவரிடம், தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "எந்த மாநிலமாக இருந்தாலும், அந்த மாநிலத்தில் இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அனைவருமே அமைதியுடன் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றபோது, அது பொதுமக்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இத்தகைய கலாசாரம் இருக்கக்கூடாது. இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீசுவது எல்லாம் தமிழ் கலாசாரம் கிடையாது.
சில பாரபட்சமான நடவடிக்கைகள் இருக்கும்போது, அது பலரை கோபமடையச் செய்கிறது. அதனால், பாரபட்சமற்ற நிகழ்வுதான் நாட்டில் இருக்க வேண்டும். சில நேரங்களில் பாதுகாப்பு கருதி, சில ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, அதை ஏதோ ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான ஆய்வாக எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT