Published : 27 Sep 2022 02:40 PM
Last Updated : 27 Sep 2022 02:40 PM

தருமபுரி | சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

திவாகர் | கோப்புப் படம்

தருமபுரி: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் பாகங்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (27ம் தேதி) தானம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மோட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவரது மூத்த மகன் திவாகர் (27). பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 23-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக ஜோலார்பேட்டை பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஆசிரியர் நகர் பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலையின் மையத்தில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திவாகரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 24-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றிரவு திவாகர் மூளை உயிரிழப்பு அடைந்தார்.

மருத்துவர்கள் இந்தத் தகவலை தெரிவித்த நிலையில், திவாகர் குடும்பத்தார் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். இந்த இக்கட்டான தருணத்திலும், அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் இணைந்து, திவாகரின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என முடிவெடுத்தனர். அவர்களது விருப்பத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தவுடன், உறுப்பு தானத்துக்கு தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். இதயம் மற்றும் நுரையீரல்களை எடுத்துச் செல்ல சென்னையிலிருந்து ஒரு மருத்துவ குழுவும், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை எடுத்துச் செல்ல கோயம்புத்தூரில் இருந்து ஒரு மருத்துவ குழுவினரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

இந்த மருத்துவக் குழுவினரின் பரிசோதனையில் திவாகரின் இதயம் மற்றும் நுரையீரல்கள் தானமாக பெறப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது தெரிய வந்தது. எனவே, இந்தக் குழுவினர் உறுப்புகளை தானம் பெற முடியாமல் சென்னை திரும்பினர். இதயம் மற்றும் நுரையீரல்களை இவர்கள் தானமாக பெற்றிருந்தால் அவற்றை உரிய பாதுகாப்புடன் சேலம் விமான நிலையம் வரை சாலை மார்க்கமாக காரில் எடுத்துச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விரைவாக சென்னைக்கு எடுத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில், திவாகரின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை தானமாக பெற்று கோவை எடுத்து செல்வதற்காக வந்த குழுவினர், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

கண்களை தர மறுப்பு: திவாகரின் தாயார் அண்மைக் காலமாக உடல் நல பாதிப்பில் உள்ளார். மகன் விபத்தில் சிக்கிய தகவலையும், ஆபத்தான நிலையில் இருந்த தகவலையும் அவரது குடும்பத்தார் திவாகரின் தாயாரிடம் தெரிவிக்காமலே இருந்துள்ளனர். இந்நிலையில், திவாகர் மூளை உயிரிழப்பு அடைந்துள்ளதால், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவரது குடும்பத்தார், கண்களை மட்டும் தானமாக வழங்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

அதற்கான காரணமாக அவர்கள், 'விபத்தில் உயிரிழந்த திவாகரின் உடல் நல்லடக்கத்துக்கு முன்பாக, அவரது தாயிடம் தகவல் தெரிவித்து மகனின் உடலை பார்த்து அவர் அழ அனுமதிக்க வேண்டும். அப்போது, கண்கள் அகற்றப்பட்டிருந்தால் முகம் பார்த்து அழும் திவாகரின் தாயார் மேலும் மனமடைந்து போவார். அந்த ஒரு காரணத்துக்காகவே கண்களை தானம் வழங்க எங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை' என கண்ணீர் துளிர்த்த விழிகளுடன் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x