Published : 27 Sep 2022 01:45 PM
Last Updated : 27 Sep 2022 01:45 PM
சென்னை: "காந்தி பொதுவானவர் என்றால் 3 ஆயிரம் கோடியில் எதற்காக வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தீர்கள்? இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்கரும்தான்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவசிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், "காந்தி பொதுவானவர், அவரது பிறந்தநாளில் ஆர்எஸ்எஸ் ஏன் ஊர்வலம் நடத்தக்கூடாது" என்று தெலங்கானா புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "காந்தி பொதுவானவர் என்றால், சாவர்க்கர் எதற்காக வருகிறார். காந்தியும் சாவர்க்கரும் ஒன்றா? கோழையை போய் வீர சாவர்க்கர் என்று பேசும் நீங்கள் எப்படி காந்தியைப் பற்றி பேசுவீர்கள். காந்தி பொதுவானவர் என்றால் ரூ.3,000 கோடியில் எதற்காக வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தீர்கள்?
இந்தியாவின் அடையாளம் காந்தியும் அம்பேத்கரும்தான். எல்லோருக்கும் தெரிந்த இந்த விஷயம் நாட்டின் பிரதமருக்கு ஏன் தெரியவில்லை? பாஜகவுக்கு ஏன் தெரியவில்லை? இந்தியாவைத் தாண்டி வல்லபாய் படேலை யாருக்கு தெரியும். அப்படியிருக்கும்போது எதற்காக சிலை வைத்தீர்கள்?
காந்தியை சுட்டுக்கொன்றதற்காக ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்து வைத்திருந்தார்கள். அந்த தடையை 16 மாதங்களில் நீக்கித் தந்தவர் வல்லபாய் படேல், அதற்கு நன்றிக்கடனாக சிலை வைத்துள்ளனர்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT